/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கருவேல்குறிச்சி மணிமுத்தாற்றில் 'கஜேந்திர மோட்ச' வைபவம்
/
கருவேல்குறிச்சி மணிமுத்தாற்றில் 'கஜேந்திர மோட்ச' வைபவம்
கருவேல்குறிச்சி மணிமுத்தாற்றில் 'கஜேந்திர மோட்ச' வைபவம்
கருவேல்குறிச்சி மணிமுத்தாற்றில் 'கஜேந்திர மோட்ச' வைபவம்
ADDED : மே 25, 2024 05:12 AM

திருக்கோஷ்டியூர் : திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயில் கஜேந்திர மோட்சம் வைபவம் கருவேல்குறிச்சி மணிமுத்தாறில் நடந்தது.
வைணவத்தலங்கள் 108ல் ஒன்றான திருக்கோஷ்டியூர் ஸ்ரீ தேவி பூதேவி சமேத சௌமிய நாராயண பெருமாள் திருக்கோயில் கஜேந்திர மோட்ச விழா வசந்த உற்ஸவமாக ஆண்டுதோறும் நடக்கிறது.
நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் கோயிலிலிருந்து புறப்பாடாகி கருவேல்குறிச்சி மணிமுத்தாறு ஆற்றங்கரையில் எழுந்தருளினார். அங்குள்ள மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடந்தது. தொடர்ந்து உச்சிக்கால பூஜை நடந்தன.
பின்னர் மாலையில் நவகலச திருமஞ்சனம் நடந்து சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. பின்னர் பத்தி உலாத்துதலாக மண்டபத்தை சுவாமி மும்முறை வலம் வந்தார். பின்னர் சாயரட்சை பூஜை நடந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் நடந்தது.
நேற்று அதிகாலை 5:30 மணிக்கு சவுமியநாராயணப் பெருமாள் சர்வ அலங்காரத்தில் பெரிய திருவடியான கருட வாகனத்தில் எழுந்தருளி கருவேல்குறிச்சி கிராமத்தினரால் புறப்பாடாகி ஆத்தங்கரையில் எழுந்தருளினார். பட்டச்சார்யார்களால் சிறப்பு பூஜை நடந்தது.
தொடர்ந்து கோயில்யானைக்கு பட்டாச்சார்யார்கள் கஜேந்திர மோட்ச பூஜைகளை செய்தனர். ஆற்றில் இறங்கிய யானை மும்முறை பிளிற, பெருமாளின் சந்தனம், சடாமி ஆண்டாள் யானைக்கு சாத்தப்பட்டு கஜேந்திர மோட்சம் நிகழ்த்தப்பட்டது. பக்தர்கள் கூடி தண்ணீர் பீய்ச்சி அடித்து யானையை குளிர்வித்தனர். பின்னர் மோட்சம் பெற்ற யானை மும்முறை வலம் வந்தது.
பின்னர் பல்லக்கில் சுவாமி எழுந்தருளி கோயில் வந்தடைந்தனர். கோயிலில் யாகசாலையிலிருந்த கலசங்களின் புனித நீரால் அபிேஷகம் நடந்து பெருமாள் ஏகாந்த அலங்காரத்தில் எழுந்தருளி தீபாராதனை நடந்தது. பின்னர் அர்த்த சாமம் பூஜை நடந்தது.

