ADDED : மார் 11, 2025 05:07 AM

திருப்புவனம்: திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம்செய்வது அதிகரித்து வருகிறது.
திருப்புவனத்தைச் சுற்றிலும் அல்லிநகரம், பழையனுார், தேளி, ஏனாதி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராம மக்கள் பலரும் கூலி வேலைக்கு மதுரை, சிவகங்கை, மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு தினசரி சென்று வருகின்றனர்.
திருப்புவனம் அரசு கிளை பணிமனை மூலம் கிராமங்களுக்கு 44 பஸ்கள் இயக்கப்படுவதாக கூறினாலும் நடைமுறையில் 30 பஸ்களே இயக்கப்படுகின்றன. அதிலும் பழுதான பஸ்களே அதிகளவில் இயக்கப்படுவதால் கிராமமக்கள் வெளியூர் சென்று வர ஷேர் ஆட்டோ, வேன், லாரி போன்றவற்றை நம்பியே உள்ளனர்.
கிராமங்களில் இருந்து வெளியூர்களில் திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளுக்கு செல்ல சரக்கு வாகனங்களை நம்பியே உள்ளனர்.
திருப்புவனத்தைச் சுற்றிலும் சாலைப்பணி, பராமரிப்பு பணி, குழாய் பதிப்பு பணி, விவசாய பணி உள்ளிட்டவற்றிற்கு கிராமங்களில் இருந்து ஆட்களை அழைத்து வர சரக்கு வாகனங்களையே பயன்படுத்துகின்றனர். பங்குனி பிறந்துள்ள நிலையில் தாயமங்கலம், இருக்கன்குடி மாரியம்மன் கோயில் என அம்மன் கோயில்களில் விழாக்கள் களை கட்டியுள்ளன. கோயில்களுக்கு செல்ல சரக்கு வாகனங்களையே அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
திருப்புவனத்தில் தொடர் முகூர்த்த நாளை ஒட்டி பலரும் சரக்கு வேன், லாரிகளில் ஆபத்தான முறையில் நின்று கொண்டே பயணம் செய்தனர். சரக்கு வாகனங்கள் விபத்திற்குள்ளாகி உயிர்இழப்பு ஏற்பட்டால் எந்த பயணிகளுக்குமே இழப்பீடு கிடைக்காது.
எனவே மாவட்ட நிர்வாகம் ஆபத்தான சரக்கு வாகன பயணங்கள் தடுத்து நிறுத்த வேண்டும்.