/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
புள்ளியியல் துறை தவறான தகவல் சேகரிப்பா
/
புள்ளியியல் துறை தவறான தகவல் சேகரிப்பா
ADDED : ஆக 27, 2024 06:26 AM
திருப்புவனம்: திருப்புவனம் வட்டாரத்தில் தவறான தகவல்களை புள்ளியியல் துறையினர் பதிவு செய்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழகம் முழுவதும் வட்டார அளவில் புள்ளியியல் ஆய்வாளர் நியமிக்கப்பட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லுாரி நிறுவனங்கள், வீடுகள், வேளாண் துறை தொடர்பான தகவல்கள், மழை பொழிவு உள்ளிட்டவை குறித்த விபரங்களை சேகரித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் நெல் சாகுபடி, தென்னை சாகுபடி குறைந்தால் அதற்கான காரணத்தை கண்டறிந்து அதற்கு ஏற்ப திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படும்.
ஆனால் நடைமுறையில் புள்ளியியல் துறையினர் நேரில் சென்று தகவல்களை சேகரிக்காமல் அலைபேசி மூலமாகவே தகவல்களை சேகரிப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
திருப்புவனம் வட்டாரத்தில் கடந்த 2014ல் மூவாயிரத்து 157 எக்டேராக இருந்த நெல் சாகுபடி கடந்தாண்டு ஆயிரம் எக்டேருக்கும் குறைந்து விட்டது. பத்து வருடங்களில் நெல்சாகுபடி குறைந்ததற்கான காரணத்தை இந்த புள்ளியியல் துறை மூலம் கண்டறிய வேண்டும்.
ஆனால் புள்ளியியல் துறை தவறான தகவல்களை கொடுத்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். திருப்புவனம் தாலுகாவில் உள்ள கண்மாய்களில் பன்றிகள் கூட்டம் கூட்டமாக தங்கி விவசாயத்தை சேதப்படுத்தி வருகின்றன.
பெரும்பாலான விவசாயிகள் தண்ணீர் வசதி இருந்தும் பன்றிகள் தொல்லை காரணமாக விவசாய நிலங்களை தரிசாக போட்டு விட்டனர். ஆனால் திருப்புவனம் வட்டாரத்தில் 90 பன்றிகள் மட்டுமே இருப்பதாக கணக்கிட்டுள்ளனர்.
வனத்துறையினர் விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் பன்றிகளே இல்லை என கலெக்டருக்குஅறிக்கை தருகின்றனர். பன்றிகளால் ஏற்படும் நஷ்டத்திற்கு இழப்பீடு எதுவும் கிடைப்பதில்லை. கீழடி மற்றும் சில கிராமங்களில் குதிரைகள் வளர்த்து வரும் நிலையில் திருப்புவனம் வட்டாரத்தில் குதிரைகளே இல்லை என பதிவு செய்துள்ளனர்.
திருப்புவனம் வட்டாரத்தில் அல்லிநகரம், கீழராங்கியன், வன்னிகோட்டை, பழையனுார், உள்ளிட்ட கிராமங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செம்மறி ஆடு, வெள்ளாடுகள் உள்ள நிலையில் புள்ளியியல் துறை வெறும் 30 ஆயிரம் மட்டுமே உள்ளதாக கணக்கிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டாரத்திலும் புள்ளியியல் ஆய்வாளருக்கு என ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தனி அறை ஒதுக்கப்பட்டுஉள்ளது. ஆனால் அந்த அலுவலகத்திற்கு புள்ளியியல் ஆய்வாளர் வருவதே இல்லை.
திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள புள்ளியியல் அலுவலகத்திற்கு யாருமே வராததால் புதர் மண்டி பயன்படுத்தமுடியாத அளவிற்கு உள்ளது. முறையான கணக்கெடுப்பு இருந்தால் மட்டுமே கிராமப்புற மக்கள்பயன்பெறும் வண்ணம் நிதி ஒதுக்க முடியும்.
எனவே மாவட்ட நிர்வாகம் புள்ளியியல் துறை செயல்பாடு குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.