/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பில் விபரீத பயிற்சியா
/
ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பில் விபரீத பயிற்சியா
ADDED : ஏப் 02, 2024 06:51 AM

திருப்புவனம் : ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்கள் சிலர் விபரீதத்தை அறிமுகப்படுத்துவதாகவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் கடும் விபரீதம்ஏற்பட வாய்ப்புண்டு என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழகத்தில் புலிக்குளம், உம்பளச்சேரி, பர்கூர், காங்கேயம் உள்ளிட்ட பல்வேறு ரக மாடுகள் ஜல்லிக்கட்டிற்காக வளர்க்கப்படுகிறது. குறிப்பாக இதற்கு புலிக்குளம் மாடுகளையே அதிகம் பயன்படுத்துகின்றனர். கன்றுகள் பிறந்த உடன் தாய்ப்பசுவிடம் இருந்து பிரித்து வந்து ஜல்லிக்கட்டிற்கு தயார்படுத்துகின்றனர்.
ஒரு கன்றுகட்டி ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பொதுவாக கன்றுகுட்டிகளை வாங்கி வந்து ஜல்லிகட்டிற்கு பழக்குவது தான் காளை வளர்ப்பவர்கள் செய்வது வழக்கம்.
சமீப காலமாக ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்குபவர்களுக்கு கார்,பைக், ரேஸ் சைக்கிள் என விலை உயர்ந்த பரிசுகள் கிடைப்பதாலும் ஜல்லிக்கட்டிற்கு பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதாலும் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பில் சிலர் விபரீதத்தை புகுத்துவது தெரியவந்துள்ளது.
கன்றுகளை வாங்கி வந்து அவற்றை வீடுகளில் கட்டி போட்டு வளர்க்காமல் வீதிகளில் அப்படியே விட்டு விடுகின்றனர். அவைகளுக்கு உணவு எதுவும் தருவதில்லை. ரோட்டில் போவோர், வருபவர்களை எல்லாம் முட்ட பயிற்சி அளிக்கின்றனர்.
உணவின்றி பசி கொடுமையால் கண்ணில் படுபவர்களை எல்லாம் கன்று குட்டிகள் மோதி விடுகின்றன. அவைகளுக்கு வெறியூட்ட கொடூரமாக தாக்குகின்றனர். இதனால் மேலும் வெறி கொண்டு மக்களை முட்டி மோதி தள்ளி விடுகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர்கள், முதியோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
பொதுமக்களை தாக்கும் கன்று குட்டிகள் யாருடையவை என்றே தெரியாத நிலையில் பொதுமக்களும் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருப்புவனம் வட்டாரத்தில் தனியாக செல்லவே அச்சப்படுகின்றனர். தேரடிவீதி, புதூர், கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டில் பயிற்சி பெறும் கன்று குட்டிகள் அதிகளவு வலம் வருகின்றன.
மாவட்ட நிர்வாகம் ரோட்டில் திரியும் கன்று குட்டிகள் உள்ளிட்டவற்றை பிடித்து கோசாலையில் அடைக்க முன்வரவேண்டும், ஜல்லிகட்டிற்கு விபரீதமான முறையில் பயிற்சி கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

