ADDED : ஆக 29, 2024 11:31 PM
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் ரோட்டோரத்தில் வளர்ந்திருக்கும் சீமைக்கருவேல மரங்களை வேலை உறுதி திட்ட பணியாளர்களைக் கொண்டு அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இத்தாலுகாவில் சிங்கம்புணரி, எஸ்.புதுார் ஒன்றியங்களில் கிராமப்புற சாலைகள் மற்றும் மாநில, தேசிய நெடுஞ்சாலைகளின் பல இடங்களில் இருபுறமும் கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளது. இது அவ்வழியாக டூவீலர்களில் செல்வோர் கண்களை அவ்வப்போது பதம் பார்க்கிறது.
சாலை பணியாளர்கள் எண்ணிக்கை போதிய அளவில் இல்லாத நிலையில், இருப்பவர்களை கொண்டு இச்செடிகளை அவ்வப்போது அகற்றினாலும் அவை மீண்டும் வளர்வதால் பிரச்னை குறையவில்லை. அனைத்து பகுதிகளிலும் இச்செடிகளை அப்புறப்படுத்த நெடுஞ்சாலைத்துறையினர் திணறுகின்றனர்.
இந்நிலையில் அந்தந்த ஊராட்சிப் பகுதியில் ரோட்டோரங்களில் வளர்ந்திருக்கும் சீமைக்கருவேல மரங்களை ஊராட்சி நிர்வாகங்கள் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்களை கொண்டு அகற்ற வேண்டும் என்றும்,அவர்களை இப்பணியில் ஈடுபடுத்தும் போது அனைத்து சாலைகளிலும் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு விபத்துகள் குறைய வாய்ப்புள்ளது, என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.