ADDED : ஜூன் 29, 2026 09:21 PM
சிங்கம்புணரி, ஜூன் 30-
சிங்கம்புணரி அருகே ஊராட்சி விரிவாக்க பகுதியில் அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் தவிக்கின்றனர்.
இவ்வொன்றியத்தில் அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட எம்.வி.எஸ்.நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. சிங்கம்புணரி பேரூராட்சியை ஒட்டியும், தாலுகா அலுவலகம் அருகேயும் இப்பகுதி அமைந்திருந்தாலும் முறையான அடிப்படை வசதிகள் கிடைப்பதில்லை. இங்கு சில மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் இருபுறமும் அடைபட்ட நிலையில் கழிவு நீர் வீடுகள் முன்பாக தேங்கி கிடக்கிறது. மழைக்காலங்களில் கால்வாய் நிரம்பி வீடுகள் முன்பாக ஓடுகிறது.
விஜய், குடியிருப்புவாசி: எங்கள் பகுதி கிராம ஊராட்சி பகுதியில் இருந்தாலும் பேரூராட்சியை ஒட்டியே அமைந்துள்ளது. எனினும் அடிப்படை வசதிகள் குறைவாகவே கிடைக்கிறது. தாலுகா அலுவலகம் செல்பவர்கள் எங்கள் தெரு வழியாகத்தான் செல்கிறார்கள். இருந்தும் போதிய அடிப்படை வசதி செய்து தரப்படவில்லை. வீடுகள் முன்பாக கழிவுநீர் தேங்குவது, பன்றிகள் பெருக்கம், குப்பை தங்குவது என கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றோம். குறைந்த அளவு தூரம் மட்டுமே கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்ட நிலையில், அதை மேலும் 100 மீட்டர் தூரத்திற்கு நீட்டித்து கழிவு நீரை வெளியேற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
