/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சமூக விரோதிகளின் புகலிடமான சாலையோர கருவேல மரங்கள்
/
சமூக விரோதிகளின் புகலிடமான சாலையோர கருவேல மரங்கள்
ADDED : செப் 11, 2024 12:16 AM

திருப்பாச்சேத்தி : திருப்பாச்சேத்தி பகுதியில் சாலையோர கருவேல மரங்கள் அகற்றப்படாததால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.
திருப்பாச்சேத்தியைச் சுற்றிலும் ஆவரங்காடு, மாரநாடு, பிச்சைப்பிள்ளேயேந்தல், கருங்குளம், கானுார், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதி மக்கள் சிவகங்கைக்கு படமாத்துார் வழியாக சென்று வருகின்றனர். திருப்பாச்சேத்தியைச் சுற்றியுள்ள பகுதிகளில் விளையும் தேங்காய், வாழை, கத்தரி, வெண்டை உள்ளிட்டவற்றை சிவகங்கை சென்று விவசாயிகள் விற்பனைசெய்து வருவதுண்டு, கிராமப்புற மக்கள் தங்கள் கோரிக்கை குறித்து தெரிவிக்க சிவகங்கைக்கு தினசரி சென்று வருகின்றனர்.
திருப்பாச்சேத்தியில் இருந்து படமாத்துார் வரை சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுவதுடன் ரோட்டை மறைத்தும் வளர்ந்துள்ளன. இரவு நேரங்களில் கருவேல மரங்களின் பின்னால் கும்பல் மறைந்திருந்து அப்பகுதி வழியாக வருபவர்களை வழிமறித்து அலைபேசி, பணம், நகை ஆகியவற்றை பறித்து வருகின்றனர்.
படமாத்தூர் ரோட்டில் அடிக்கடி இதுபோன்ற வழிப்பறி சம்பவங்கள் நடப்பதால் அச்சத்துடனேயே பொதுமக்கள் சென்று வரவேண்டியுள்ளது.
இப்பாதையில் செல்லும் பலரும் அலைபேசியை பறிகொடுத்துள்ளனர். போலீசார் ரோந்து வரும் போது கருவேல மரங்களின் அடியில் மறைந்து கொள்ளும் கும்பல் அதன்பின் வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே நெடுஞ்சாலைத்துறையினர் திருப்பாச்சேத்தி படமாத்தூர் சாலையை மறைத்து வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.