/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிங்கம்புணரியில் மீண்டும் வழிப்பறி கொள்ளை
/
சிங்கம்புணரியில் மீண்டும் வழிப்பறி கொள்ளை
ADDED : ஏப் 05, 2024 12:06 AM
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் மீண்டும் வழிப்பறி கொள்ளையர்கள் கைவரிசை காட்டத் துவங்கியதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக தொடர் வழிப்பறி, கொள்ளை, கோயில் உண்டியல் திருட்டு நடந்து வந்தது. சிறிய சம்பவங்களில் மட்டும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில் பல வழக்குகளில் துப்பு துலக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் மீண்டும் இப்பகுதியில் வழிப்பறி நடக்க துவங்கியுள்ளது. 2 நாட்களுக்கு முன்பு காளாப்பூர் அருகே டூவீலரில் சென்ற இரு பெண்களை கீழே தள்ளிய நபர்கள் தாலிச் செயினை பறிக்க முயன்ற போது அப்பெண்கள் போராடி செயினை காப்பாற்றினர்.
கொள்ளையர்கள் தப்பி ஓடினர். நேற்றும் அதே பகுதியில் வழிப்பறி நடந்துள்ளது. கல்லலை சேர்ந்த முத்துராதா 35, இவரது மாமியார் வள்ளியம்மை 80 இருவரும் டூவீலரில் கிருங்காக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டு நேற்று மதியம் 1:00 மணியளவில் ஊருக்கு திரும்பினர். எம்.கோவில்பட்டி விலக்கு அருகே டூவீலரில் பின்னால் வந்த இருவர் முத்துராதா கழுத்தில் இருந்து 3 பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்றனர். கீழே விழுந்ததில் வள்ளியம்மைக்கு தலையில் அடிபட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். சதுர்வேதமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

