ADDED : ஆக 21, 2024 08:42 AM
சிவகங்கை, : அரசு ஊழியர் போன்றே டாஸ்மாக் ஊழியருக்கும் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்த வேண்டும் என சிவகங்கையில் நடந்த டாஸ்மாக் ஊழியர் சங்க மாநில குழு கூட்டத்தில் பொது செயலாளர் கே.திருச்செல்வம் பேசினார்.
சிவகங்கையில், டாஸ்மாக் ஊழியர் சங்க மாநில குழு கூட்டம் நடந்தது. மாநில துணை தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாநில துணை தலைவர் தெய்வராஜ், துணை பொது செயலாளர்கள் ஜான்அந்தோணிராஜ், ராமு, முருகன், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சேதுராமன், மாவட்ட தலைவர் திருமாறன், செயலாளர் குமார், பொருளாளர் பாண்டி பங்கேற்றனர்.
டாஸ்மாக் ஊழியர் சங்க மாநில பொது செயலாளர் கே.திருச்செல்வம் பேசியதாவது: அரசு ஊழியர்களுக்கு இணையான மற்றும் காலமுறை சம்பளம் வழங்க வேண்டும்.
அரசு ஊழியர் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தியது போன்றே, டாஸ்மாக் ஊழியர்கள் வயதையும் உயர்த்த வேண்டும். மதுபானக்கடைகளில் காலி மதுபாட்டில்களை பெறும் திட்டத்தை, அரசு திரும்ப பெற வேண்டும்.
கோரிக்கையை நிறைவேற்றித்தர கோரி தமிழ்நாடு அரசை வலியுறுத்தி அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது குறித்து மாநில குழு கூட்ட தீர்மானத்தில் முடிவு செய்யப்படும், என்றார்.