/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பதவி முடியப்போகிறது... பிரச்னைக்கு தான் தீர்வு கிடைக்கவில்லை
/
பதவி முடியப்போகிறது... பிரச்னைக்கு தான் தீர்வு கிடைக்கவில்லை
பதவி முடியப்போகிறது... பிரச்னைக்கு தான் தீர்வு கிடைக்கவில்லை
பதவி முடியப்போகிறது... பிரச்னைக்கு தான் தீர்வு கிடைக்கவில்லை
ADDED : செப் 05, 2024 05:13 AM
காரைக்குடி : கல்லல் ஊராட்சி ஒன்றியத்தின் நீண்ட கால பிரச்னையான கல்லல் சந்தை மற்றும் பஸ் ஸ்டாண்ட் குறித்து நான்கரை ஆண்டுகளாக புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லையே என ஒன்றிய கவுன்சிலர்கள் கவலை தெரிவித்தனர்.
கல்லல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. சேர்மன் சொர்ணம் தலைமையில் நடந்த கூட்டத்தில் பி.டி.ஓ., க்கள் ராஜசேகர் மற்றும் மகாலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
11 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் சங்கீதா: நீண்டகால பிரச்னையான கல்லல் சந்தை மற்றும் பஸ் ஸ்டாண்ட் குறித்து கடந்த நான்கரை ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. மழைக்காலத்திற்கு முன்பு கண்மாய் மடைகளை சரி செய்ய வேண்டும். கடந்த பல கூட்டங்களில் கல்லல் புதிய தாலுகாவாக மாற்ற வேண்டும், பத்திரப்பதிவு அலுவலகம் அரசு கலைக்கல்லுாரி அமைக்க நடவடிக்கை வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் எந்த பதிலும் வரவில்லை.
சேர்மன் சொர்ணம்: கல்லல் சந்தை மற்றும் பஸ் ஸ்டாண்ட் பிரச்னை குறித்து தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வருகிறோம். நீண்ட கால பிரச்னையாக இது உள்ளது. சரி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
1வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் சையது அப்தாகீர்: எங்கள் பகுதியில் கண்மாய் மடைகள் பராமரிப்பின்றி கிடக்கிறது. மழை பெய்து தண்ணீர் நிற்காமல் மறுகால் பாய்ந்து வீணாகிறது. விவசாய நேரத்தில் தண்ணீர் இன்றி விவசாயிகள் சிரமமப்படுகின்றனர். சுற்றுலாத்தலமான ஆத்தங்குடி பலவான்குடி சாலை முற்றிலும் சேதமடைந்து கிடக்கிறது. சாலையை சரி செய்ய தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.
அதிகாரிகள் கூறுகையில்: நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான சாலையாக இருப்பதால் கடிதம் எழுதி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஜே.சி.எல்., விதைநெல் பற்றாக்குறை உள்ளது. அதனை சரி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2 வார்டு ஒன்றிய கவுன்சிலர் மருதுபாண்டி: கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ள கருப்பொருளில் எந்த வேலை, எப்போது டெண்டர் விடப்பட்டது என்று எதையும் குறிப்பிடாமல் தொகை மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. செலவு பில்லில் மட்டும் கையெழுத்து வாங்குகிறீர்கள். அடகு வைத்த சொத்தை காட்டி ஒருவர் சால்வன்சி பெற்றுள்ளார். அதிகாரிகள் ஆய்வு செய்யாமல் எப்படி சால்வன்சி கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. இவ்வாறு கொடுத்தால் பின்னால் வரக்கூடிய அதிகாரிகளுக்கு தான் பிரச்னை. முறைகேடாக வழங்கப்பட்ட சால்வன்சி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் செல்வோம்.
10 வார்டு உதயக்குமார்: வாரச் சந்தைக்கு கட்டமைப்பு வசதியுடன் நிரந்த இடம் வேண்டும். இதுவரை எந்த நடவக்கையும் இல்லாதது வருத்தமளிக்கிறது. கல்லலில் உள்ள கண்மாய் மடைகளை சீரமைக்க வேண்டும். கல்லலில் குடிநீர் பிரச்னை உள்ளது. தண்ணீர் விநியோகம் முறையாக இல்லை.
அதிகாரிகள் கூறுகையில்: குடிநீர் வழங்கவும், மடைகளை சரி செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு முறையும் கூட்டத்தில், கவுன்சிலர்கள் தெரிவிக்கும் புகார்கள் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.