/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பூண்டு விலை கடும் உயர்வு சிவகங்கையில் கிலோ ரூ.400
/
பூண்டு விலை கடும் உயர்வு சிவகங்கையில் கிலோ ரூ.400
ADDED : ஆக 15, 2024 04:01 AM

சிவகங்கை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பூண்டு விலை கிடுகிடு வென உயர்ந்து வருவதால் பொதுமக்கள் வாங்க தயக்கம் காட்டுகின்றனர்.
தமிழக மக்கள் பூண்டை அதிகம் பயன்படுத்தினாலும் இங்கு அதிகமாக பயிரிடுவதில்லை. மலைப்பகுதிகளில் மட்டும் விளையும் பூண்டு தமிழகத்தில் கொடைக்கானல் மலைப்பகுதியை ஒட்டி உள்ள வில்பட்டி, பூம்பாறை, மன்னவனுார் உள்ளிட்ட கிராமங்களில் விளைவிக்கப்படுகிறது.
தமிழக தேவைக்கு மத்தியபிரதேசம், இமாச்சலபிரதேசம், குஜராத் போன்ற வட மாநிலங்களிலிருந்தும், சீனாவில் இருந்தும் தான் பூண்டு இறக்குமதி ஆகிறது. இந்தாண்டு வடமாநிலங்களில் பூண்டு விளைச்சல் குறைந்ததால் கடந்த சில மாதங்களாக பூண்டின் விலை உயர்ந்துள்ளது.
வியாபாரி கூறுகையில், சிவகங்கை சந்தைக்கு தேனி மாவட்டம் வடுகப்பட்டி பூண்டு மார்க்கெட்டில் இருந்தும், மதுரை, திண்டுக்கல் மார்க்கெட்டில் இருந்து தான் வருகிறது. கடந்த சில வாரங்களாகவே வரத்து குறைவாக உள்ளது. அதனால் முதல் தர பூண்டு கிலோ ரூ.400 வரை உயர்ந்துள்ளது.
இமாச்சல பூண்டு மொத்த விலையில் கிலோ ரூ.320க்கும் சில்லரை விலையில் 380க்கும், இமாச்சல் உடைப்பு ரக பூண்டு மொத்த விலையில் கிலோ 230க்கும் சில்லரை விலையில் ரூ.280க்கும், நாட்டுப்பூண்டு உதிரி மொத்த விலையில் கிலோ 185க்கும் சில்லரை விலையில் கிலோ ரூ.230க்கும் விற்கப்படுகிறது என்றார்.