/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனம் வைகை ஆற்றில் ஆடி அமாவாசை தர்ப்பணம்
/
திருப்புவனம் வைகை ஆற்றில் ஆடி அமாவாசை தர்ப்பணம்
ADDED : ஆக 05, 2024 07:16 AM

திருப்புவனம் : திருப்புவனத்தில் நேற்று ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு திதி, தர்ப்பணம் வழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் குவிந்தனர்.
காசியை விட அதிக புண்ணியம் தரும் ஸ்தலம் திருப்புவனம். வைகை ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் வழங்கி வழிபடுவதால் அவர்களது ஆசி கிடைக்கும். நேற்று ஆடி அமாவாசையாக இருந்ததால், அதிகாலை 5:00 மணி முதல் ஏராளமான பக்தர்கள் வைகை ஆற்று கரையில் குவிந்தனர். ஆற்றிற்குள் கூரை அமைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கினர். பக்தர்கள் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். பசு மாட்டிற்கு அகத்தி கீரை, வாழைப்பழம் வழங்கினர். கூட்ட நெரிசலை தவிர்க்க நான்கு மாட வீதியில் போலீசார் வாகனங்களுக்கு தடை விதித்தனர்.
* தேவகோட்டை அருகே கண்டதேவி ஜடாயு தீர்த்தத்தில்ல, ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
கண்டதேவியில் உள்ள ஜடாயு தீர்த்த குளத்தில், ராமர் தர்ப்பணம் கொடுத்ததாக வரலாறு உள்ளது. இதன் காரணமாக அமாவாசையில் முன்னோர்களுக்கு இந்த தீர்த்த குளத்தில் அதிகளவில் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, குளத்தில் நீராடி விட்டு, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பின்னர் சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.