/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நகைக்காக பெண் கொலை இருவருக்கு ஆயுள்
/
நகைக்காக பெண் கொலை இருவருக்கு ஆயுள்
ADDED : பிப் 27, 2025 01:41 AM
சிவகங்கை:காரைக்குடியில் பெண்ணை கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்து நகையை திருடி சென்ற இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
காரைக்குடி வைரவபுரம் பகுதி செல்லமுத்து மகன் சேகர் 42. சலவையகம் நடத்தினார். இவரது நண்பர் சந்தைபேட்டை முத்துச்சாமி மகன் புதுமை பித்தன் 45. இவர் தினமும் சேகர் கடைக்கு சென்று உதவியுள்ளார்.
சேகருக்கு கடன் தொல்லை இருந்தது. கடனை அடைக்க இருவரும் கடைக்கு வரும் பெண்ணிடம் நகையை திருட திட்டமிட்டனர். 2010 ஜூலை 26ல் காரைக்குடி வாசுதேவன் மனைவி விஜயலட்சுமி 45 , சேகர் கடைக்கு தான் கொடுத்த துணியை வாங்க சென்றார். அப்போது விஜயலட்சுமியை கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்த சேகர், புதுமை பித்தன் பின்னர் விஜயலட்சுமி அணிந்திருந்த 2 பவுன் நகையை திருடிச்சென்றனர்.
போலீசார் இருவரையும் கைது செய்தனர். வழக்கு விசாரணை சிவகங்கை மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. கொலை செய்ததற்காக சேகர், புதுமை பித்தனுக்கு ஆயுள் தண்டனையும், நகையை திருடிய குற்றத்திற்காக 7 ஆண்டு சிறையும், தலா ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்த நீதிபதி கோகுல் முருகன் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.