/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மத்திய அரசின் 'ஜல்ஜீவன்' திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும் இலவச குடிநீர்
/
மத்திய அரசின் 'ஜல்ஜீவன்' திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும் இலவச குடிநீர்
மத்திய அரசின் 'ஜல்ஜீவன்' திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும் இலவச குடிநீர்
மத்திய அரசின் 'ஜல்ஜீவன்' திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும் இலவச குடிநீர்
ADDED : மே 03, 2024 05:47 AM
இம்மாவட்டத்தில் மத்திய அரசின் 'ஜல்ஜீவன்' திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும் இலவச குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்ட அளவில் எஸ்.புதுார் ஒன்றியம் தவிர்த்து 11 ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் 3 லட்சத்து 16 ஆயிரத்து 663 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
2023- - 24 ம் ஆண்டிற்கு 1 லட்சத்து 10 ஆயிரத்து 172 வீடுகளுக்கு இணைப்பு வழங்குவதற்காக அரசு ரூ.76 கோடி வரை ஒதுக்கியுள்ளது.
இது வரை 32 ஆயிரத்து 492 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுத்துள்ளனர். விடுபட்ட வீடுகளுக்கு இணைப்பு வழங்குவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. மக்களின் பங்களிப்பு தொகையாக தலா ஒரு இணைப்பிற்கு ரூ.2,000 டெபாசிட் மட்டுமே அந்தந்த ஊராட்சியில் கட்ட வேண்டும். அதற்கு பின் குழாய் பதித்தல் உட்பட எவ்வித செலவும் இல்லை. கட்டணமே இன்றி குடிநீர் வழங்கப்படும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மக்கள் ஆர்வமுடன் குடிநீர் குழாய் இணைப்பு கேட்டு பெறுகின்றனர். குழாய் பதிக்க வரும் ஒப்பந்ததாரர்கள் டெபாசிட் தொகையை ஊராட்சி அலுவலகத்தில் செலுத்த விடாமல், தாங்களே வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. ஊராட்சியில் டெபாசிட் செய்து அதற்கான ரசீது வைத்திருந்தால் மட்டுமே, தொடர்ந்து குடிநீர் இணைப்பு பெற முடியும். ஒப்பந்ததாரர்களிடம் டெபாசிட் தொகையை கொடுத்தால், அந்தந்த வீட்டு உரிமையாளர் பெயரில் கட்டியிருப்பார்களா என்ற சந்தேகம் மக்களிடம் எழுந்துள்ளது.
குடிநீர் குழாய்க்கு கட்டாய வசூல்
தெருக்களில் உள்ள குடிநீர் குழாயில் இருந்து வீட்டிற்கு எடுத்து செல்லும் குழாய் முழுவதும் அரசு செலவில் தான் நடக்கிறது. இதற்காக பணம் வழங்க தேவையில்லை என திட்டத்தில் தெரிவிக்கின்றனர். ஆனால், பெரும்பாலான கிராமங்களில் குழாய் செலவு தொகையாக ஒரு வீட்டிற்கு ரூ.1,500 வரை கட்டாய வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது. மத்திய அரசு நல்ல நோக்கத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டத்தை கொண்டு வருகிறது. அதை முறையாக மக்களிடம் கொண்டு செல்வதில் அதிகாரிகள் அக்கறை காட்ட வேண்டும் என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஊராட்சியில் 'டெபாசிட்' கட்டவும்
ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி கூறியதாவது: 'ஜல்ஜீவன்' திட்ட குடிநீர் குழாய் இணைப்பிற்கு ஊராட்சியில் தான், டெபாசிட் தொகை ரூ.2 ஆயிரம் கட்ட வேண்டும். வேறு எந்த தொகையும் மக்கள் செலுத்த தேவையில்லை. சில இடங்களில் பணியை விரைந்து முடிப்பதற்காக ஒப்பந்ததாரர்களே மக்களிடம் டெபாசிட் தொகையை வசூலித்து ஊராட்சியில் செலுத்துகின்றனர். இருப்பினும் இது தவறான செயல் தான்.