ADDED : ஜூலை 24, 2026 06:21 PM
திருப்புத்துார்,ஜூலை 25-
திருப்புத்துார் நகருக்கு வெளியே தற்போதுள்ள புறவழிச்சாலையை விஸ்தரிக்கும் திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்புள்ளது.
ஆறு மாதங்களுக்கு முன் திருப்புத்துாரில் கூடுதல் புறவழிச்சாலை அமைப்பதாக அப்போதைய முதல்வரால் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அதற்கான திட்டப்பணிகளை நெடுஞ்சாலைத்துறையின் தேசிய நெடுஞ்சாலை பிரிவினர் ஆய்வு செய்தனர். சிவகங்கை தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலையிலிருந்து துவங்கி மதுரை,திண்டுக்கல் ரோடுகளை இணைக்கும் புறவழிச்சாலைக்கு சர்வே செய்யப்பட்டது. அதற்கான அடையாளக் கற்கள் சர்வே செய்யப்பட்ட இடத்தில் ஊன்றப்பட்டது. ஆனால் அதற்கான நிதி ஒதுக்கீடு இல்லாததால் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு இந்த நிதி நிலை அறிக்கையில் வருமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் திருப்புத்துார் நகருக்கு வெளியே தற்போதுள்ள திருமயம்- மானாமதுரை தேசிய நெடுஞ்சாலைக்கான புறவழிச்சாலை புதுக்கோட்டை,காரைக்குடி,கண்டரமாணிக்கம்,சிவகங்கை ரோடுகளை இணைக்கிறது. அதில் தற்போது மதுரை,திண்டுக்கல் ரோடுகளை இணைக்கும் புறவழிச்சாலை திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் பொன்னமராவதி ரோட்டையும் இணைத்து புதுக்கோட்டை ரோட்டிலுள்ள புறவழிச்சாலையுடன் இணைத்து முழுமையான புறவழிச் சுற்றுச்சாலையாக்க திட்டமிட வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
