ADDED : நவ 16, 2025 04:15 AM
சிவகங்கை: நெற் பயிருக்கு உரமிட 3200 டன் யூரியா, காம்ப்ளக்ஸ் உரம் தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண் இணை இயக்குனர் சுந்தரமகாலிங்கம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: மாவட்ட அளவில் நடப்பு சம்பா பருவத்தில் 1.70 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். இவை 20 முதல் 50 நாட்கள் வயது வரை உள்ள பயிராகும். பெரும்பாலான சாகுபடி பகுதியில் போதிய மழை இல்லாதபோதும், பாசன வசதி உள்ள பகுதிகளில் பயிர்களுக்கு உரமிடும் நிலை வந்துவிட்டது. இவற்றிற்கு தேவைப்படும் யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் போதிய அளவு தொடக்க கூட்டுறவு கடன் சங்கம், தனியார் உரக்கடைகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்தது.
இன்னும் தேவை அதிகரிக்கும் என்பதால் இம்மாவட்டத்திற்கு தேவையான 3200 டன் யூரியா மற்றும் காம்ப்ளக்ஸ் உரம் வரவழைக்கப்பட்டு, தொடக்க கூட்டுறவு கடன் சங்கம், தனியார் உரக்கடைகளில் வைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில் தற்போது யூரியா 2573, டி.ஏ.பி., 723, பொட்டாஷ் 573 மற்றும் காம்ப்ளக்ஸ் 2434 டன் வரை தொடக்க கூட்டுறவு கடன்சங்கங்கள், தனியார் உரக்கடைகளில் இருப்பில் உள்ளது. விவசாயிகள் உரங்களை பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

