/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வேளாண் அறிவியல் நிலையத்திற்கு 5 விருதுகள்
/
வேளாண் அறிவியல் நிலையத்திற்கு 5 விருதுகள்
ADDED : செப் 05, 2025 11:44 PM
சிவகங்கை:வேளாண் அறிவியல் நிலையங்களில் சிறந்தவையாக தேர்வு பெற்ற குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்திற்கு 5 விருது வழங்கப்பட்டுள்ளதாக குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய தலைவர் செந்துார் குமரன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் பத்தாவது மண்டலத்தின் கீழ் தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களில் 72 வேளாண் அறிவியல் நிலையங்கள் செயல்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் வேளாண் அறிவியல் நிலையங்களுக்கான மதிப்பாய்வு கருத்தரங்கு நடத்தப்படும். கடந்த ஆண்டு இக்கருத்தரங்கு தெலுங்கானா மாநிலம் ைஹதராபாத், ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரியில் நடந்தது. 2024- 2025 ம் ஆண்டிற்கான மதிப்பாய்வு கருத்தரங்கு, வேலுார் வி.ஐ.டி., பல்கலையில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக துணை பொது இயக்குனர் ராஜ்பீர் சிங் தலைமையில் நடந்தது.
இக்கருத்தரங்கில் சிறப்பாக செயல்பட்ட வேளாண் அறிவியல் நிலையங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்திற்கு 5 விருதுகள் வழங்கப்பட்டது.
வேளாண் அறிவியல் நிலையங்களில், 'ஆரியா' என்ற கிராமப்புற இளைஞர்களை வேளாண்மையில் நிலை நிறுத்துதல், பயிற்சி திட்டத்தை செயல்படுத்துவதில் தொடர்ந்து 4 ஆண்டுகளாக குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையம் முதலிடத்தை பிடித்துள்ளது. வேளாண் தொழில் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி செயல்பாடுகளில் இந்த ஆண்டிற்கான முதலிடத்தை குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையம் பெற்றது.
இது தவிர தேசிய கால்நடை இயக்கத்தின் உதய் மித்ரா திட்டம் பயிர் மற்றும் கால்நடை வளர்ப்பு, தொழில் மேம்பாடு, காப்பீடு, திறன் மேம்பாட்டு பயிற்சியில் டிஜிடல் தரவுகளை எளிமைபடுத்தியது போன்ற வேளாண் கால்நடை சார்ந்த செயல்பாடுகளுக்கு ஒட்டு மொத்தமாக 5 விருது பெற்றுள்ளது, என்றார்.