ADDED : நவ 05, 2025 12:27 AM
சிவகங்கை: மாவட்டத்தில் விவசாய தேவைக்கு தொடக்க கூட்டுறவு கடன் சங்கம், தனியார் உரக்கடைகளுக்கு 550 டன் யூரியா உரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் யூரியாவிற்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாகவும், ரூ.400 செலுத்தி வாளி ஒன்று (நுண்ணுரம்) வாங்கினால் தான் யூரியா, காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட உரங்கள் தனியார் உரக்கடைகளில் வழங்குவோம் என தெரிவிப்பதாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, பற்றாக்குறை உள்ள 38 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு 450 டன், தனியார் உரக்கடைகளுக்கு 100 டன் யூரியா உரங்கள் வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போது மாவட்ட அளவில் யூரியா 2,158 டன், டி.ஏ.பி., 1,123 டன், பொட்டாஷ் 530 டன், காம்ப்ளக்ஸ் 2,455 டன் வரை கூட்டுறவு கடன் சங்கம், தனியார் உரக் கடைகளில் இருப்பு வைத்துள்ளனர்.

