/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மகிழ்ச்சி, வளர்ச்சி தரும் புத்தாண்டு
/
மகிழ்ச்சி, வளர்ச்சி தரும் புத்தாண்டு
ADDED : ஜன 02, 2026 05:30 AM
சிவகங்கை: இந்த ஆங்கில புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி, வளர்ச்சி, இறை அருளை தரும் ஆண்டாக அமையும் என சிவகங்கையில் நடந்த சிறப்பு திருப்பலியில் மறைமாவட்ட ஆயர் லுார்து ஆனந்தம் பேசினார்.
சிவகங்கை புனித அலங்கார அன்னை சர்ச்சில் புத்தாண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணிக்கு திருப்பலி நடந்தது. சிவகங்கை பாதிரியார் ஜெபமாலை சுரேஷ் வரவேற்றார்.
உதவி பங்கு தந்தை ஸ்டீபன் திருப்பலிக்கான ஏற்பாட்டை செய்திருந்தார். சிவகங்கை மறை மாவட்ட ஆயர் லுார்து ஆனந்தம் தனது ஆசியுரையில், இந்த புத்தாண்டு மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி, வளர்ச்சி, இறை அருளை பெற்றுத்தரும் ஆண்டாக அமையும். அனைத்து நாட்டு காலண்டர்களையும் வழிநடத்துவது ஆங்கில புத்தாண்டு தான். இது ஆண்டவரின் ஆண்டாக இருக்கும் என்றார்.
சி வகங்கை அருகே வல்லனி அன்னை தெரசா சர்ச்சில் பாதிரியார் பிலிப்ஸ் சேவியர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.
சிவகங்கை மானாமதுரை ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ., இமானுவேல் சர்ச்சில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு 11:30 முதல் 2:00 மணி வரை பாதிரியார் பீட்டர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
*இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் சர்ச்சில் திருத்தல அருட் பணியாளர் ஜான் வசந்தகுமார் தலைமையில் பாதிரியார்கள் சிறப்பு திருப்பலி நடத்தினர். மானாமதுரை புனித குழந்தை தெரசாள், சி.எஸ்.ஐ., சர்ச்களில் நடைபெற்ற புத்தாண்டு வழிபாட்டில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
காளையார்கோவில் புனித அருளானந்தர் ஆலயத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தது. பங்குத்தந்தை சேசு, உதவிப் பங்குதந்தை நிக்கோலாஸ், ஆனந்தா கல்லுாரி செயலாளர் செபஸ்தியான் இணைந்து திருப்பலியை நிறைவேற்றினர்.
* தேவகோட்டை ராம்நகர் உலக மீட்பர் சர்ச்சில் நள்ளிரவில் புத்தாண்டு சிறப்பு திருப்பலியை ராம்நகர் பங்கு பாதிரியார் வின்சென்ட் அமல்ராஜ் தலைமையில் திருச்சி ரட்சகர் சபை பாதிரியார் தானியேல் ஜெயசிங், திருத்தொண்டர் மைக்கேல் நிறைவேற்றினர்.
தேவகோட்டை சகாய அன்னை சர்ச்சில் வட்டார அதிபர் பாதிரியார் அருள் சந்தியாகு தலைமையில் பாதிரியார் ஜான் பீட்டர், உதவி பாதிரியார் திருப்பலி நிறைவேற்றினர்.
தேவகோட்டை சி.எஸ்.ஐ. சபை கிறிஸ்து நாதர் சர்ச்சில் போதகர் சாராள் சமாதான ஜெயம், புளியால் பங்கு பெரியநாயகி அன்னை சர்ச்சில் பாதிரியார் சுவாமிநாதன் தலைமையில் மறை மாவட்ட குரு குழந்தையேசு, உதவி பணியாளர் பென்சிகர் திருப்பலி நிறைவேற்றினர்.
கோயில்களில் சுவாமி தரிசனம் * மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வீர அழகர் கோயில், அங்காள பரமேஸ்வரி அம்மன், வழிவிடும் முருகன் கோ யில் உள்ளிட்ட கோயில்களிலும் நடைபெற்ற வழிபாட்டில் சுவாமி தரிசனம் செய்தனர்.
* தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில், புவனேஸ்வரி அம்மன் கோயில், சுந்தர விநாயகர் கோயில், சவுபாக்ய துர்க்கை அம்மன் கோயில், சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில், கலங்காது கண்ட விநாயகர் கோயில், அத்தி வாராஹி அம்மன் கோயில், கற்பக விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கோதண்ட ராமர் கோயில், ரங்கநாத கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு சுவாமிகளுக்கு திருப்பதி வெங்கடாசலபதி அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.

