/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நடுரோட்டில் தவித்த பயணிகள் உதவிய ரோந்து போலீஸ்
/
நடுரோட்டில் தவித்த பயணிகள் உதவிய ரோந்து போலீஸ்
ADDED : ஜன 22, 2024 05:08 AM

திருப்புவனம்: திருப்புவனத்தில் நேற்று அரசு பஸ் பழுதாகி நின்ற நிலையில் அதில் பயணம் செய்த பயணிகளை மற்ற பஸ்கள் ஏற்ற மறுத்ததால் நடுரோட்டில் தவித்தவர்களை நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மீட்டு அனுப்பி வைத்தனர்.
மதுரையில் இருந்து திருப்புவனம், திருப்பாச்சேத்தி வழியாக கமுதி, ராமேஸ்வரம், சாயல்குடி, பரமக்குடி உள்ளிட்ட நகரங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நாள்தோறும் 200க்கும் மேற்பட்ட பஸ்கள் திருப்புவனத்தை கடந்து சென்று வருகின்றன. இந்த தொலை தூர பஸ்களை நம்பியே திருப்புவனம், திருப்பாச்சேத்தி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் கல்யாணம், திருவிழா, மருத்துவமனை, கூலி வேலை உள்ளிட்டவற்றிற்கு சென்று வருகின்றனர்.
நேற்று தை மாத முதல் முகூர்த்தம் என்பதால் அனைத்து பஸ்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. கமுதியில் இருந்து நேற்று மதியம் மதுரை சென்ற அரசு பஸ் திருப்புவனம் நெல்முடிகரை மின்வாரிய அலுவலகம் அருகே பழுதாகி நின்றது. இதில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் வந்தனர். கண்டக்டர் அடுத்தடுத்து வந்த அரசு பஸ்களை நிறுத்தி அனுப்ப முயன்றார். ஆனால் பஸ்கள் அனைத்திலும் கூட்டம் நிரம்பியிருந்ததால், யாருமே நிறுத்த முன்வரவில்லை.
நடு ரோட்டில் கைகுழந்தைகளுடன் பெண்கள், முதியோர்கள் தவித்தனர். இதை அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் எஸ்.ஐ., சந்தானராஜ் தலைமையில் குழுவினர் அடுத்தடுத்து வந்த பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிவிட்டனர்.