ADDED : செப் 28, 2024 06:29 AM

காரைக்குடி, : காரைக்குடியில் போக்குவரத்து நெரிசலை தடுக்க மாற்றப்பட்ட ஒரு வழிச்சாலைகள் பல இருவழிச் சாலையாக மீண்டும் மாற்றப்பட்டதால் நெரிசலில் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகர் காரைக்குடி உள்ளது. மாநகராட்சி அந்தஸ்து பெற்றுள்ள காரைக்குடியில் நாளுக்கு நாள் வாகனங்களில் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது.
காரைக்குடியின் நுழைவு வாயிலான பழைய பஸ் ஸ்டாண்ட் பர்ஸ்ட் பீட், செகன்ட் பீட், செக்காலை ரோடு, கல்லுக்கட்டி உட்பட பல பகுதிகள் குறுகிய சாலைகளாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் எப்போதும் காணப்படுகிறது. இதனை தடுக்க செகன்ட் பீட்டிலிருந்து செக்காலை ரோடு செல்லும் சாலை ஒரு வழிச்சாலையாக மாற்றப்பட்டது.
செக்காலை ரோட்டில் கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்லாமல் அம்மன் சன்னதி, ஏ.ஆர்.ஏ., ரோடு, மகர் நோன்பு திடல், கண்டனுார் ரோடு வழியாக செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கடைவீதிகள் அதிகம் உள்ள செக்காலை ரோட்டில் வாகனங்கள் உள்ளே நுழையாதால் போக்குவரத்து குறைந்திருந்தது. இந்நிலையில் செகன்ட் பீட்டில் இருந்து செக்காலை ரோட்டிற்குள் மீண்டும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தற்போது திருவிழா காலம் தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இச்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பிக்க வாய்ப்பு உள்ளது.