/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
உயிரிழப்புகளை தடுக்க கூடுதல் ஆம்புலன்ஸ்
/
உயிரிழப்புகளை தடுக்க கூடுதல் ஆம்புலன்ஸ்
ADDED : நவ 15, 2024 06:55 AM
திருப்புவனம்: மதுரை -- பரமக்குடி நான்கு வழிச்சாலையில் விபத்துக்களில் உயிரிழப்பை தடுக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை மூன்றாக பிரித்து கூடுதல் வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலையும் அதன்பின் ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை வரை இருவழிச்சாலையும் அமைக்கப்பட்டு வாகனப்போக்குவரத்து நடந்து வருகிறது.
நான்கு வழிச்சாலையில் விபத்து, போக்குவரத்து நெரிசல், அவசர காலங்களில் மீட்பு பணிக்காக திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியில் ஒரு ஆம்புலன்ஸ், விபத்து மீட்பு வாகனம், நான்கு வழிச்சாலையை கண்காணிக்க நெடுஞ்சாலை ரோந்து வாகனம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.
நான்கு வழிச்சாலை, ஆறுவழிச்சாலை உள்ளிட்டவற்றின் முக்கிய நோக்கமே விபத்து மற்றும் உயிரிழப்புகளை தவிர்ப்பது தான், கடந்த சில வருடங்களில் நான்கு வழிச்சாலையில் விபத்துகள் அதிகரித்துள்ள நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன.
இதனையடுத்து உயிரிழப்புகளை தடுக்கும் வண்ணம் நான்கு வழிச்சாலையில் ஒவ்வொரு 40 கி.மீ., தூரத்திற்கும் ஒரு ஆம்புலன்ஸ், மீட்பு வாகனம், நெடுஞ்சாலை ரோந்து வாகனம் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி விபத்து நடந்தால் உடனுக்குடன் மீட்பு வாகனம் பயன்படுத்தப்பட்டு வாகனங்கள் மீட்கப்பட்டு அகற்றப்படுவதுடன் ஆம்புலன்ஸ் வாகனமும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க உடனுக்குடன் அனுப்பப்பட உள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இந்த முயற்சியால் விபத்துகளில் உயிரிழப்பு குறைய வாய்ப்புள்ளது.