ADDED : அக் 23, 2025 11:29 PM
சிவகங்கை: வடகிழக்கு பருவ மழை தாக்கத்தில் இருந்து தோட்டக்கலை பயிர்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: மாவட்டத்தில் பல ஆண்டாக தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் பல்லாண்டு பயிரான தென்னை, மா, கொய்யா, மாதுளை, திராட்சை, மிளகு, கொக்கோ பயிர் களை வடகிழக்கு பருவ மழை பாதிப்பில் இருந்து காத்து கொள்ள வேண்டும்.
இதற்காக காய்ந்த மற்றும் பட்டுப்போன மரக்கிளைகளை அகற்ற வேண்டும். மரத்திற்கு நல்ல காற்றோட்டம், எடையை குறைக்கும் விதமாக கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து வைக்க வேண்டும். தோட்டத்தில் போதிய வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும். இளம் செடிகள் காற்றில் சாய்ந்துவிடாமல் இருக்க தாங்கு குச்சிகள் கட்ட வேண்டும். உரிய நேரத்தில் தேங்காய்களை அறுவடை செய்தால் காற்று மற்றும் புயலினால் ஏற்படும் சேதங்களை தவிர்க்கலாம். திராட்சை செடியில் போர்டோப் பசையை பூச வேண்டும். முதிர்ந்த பழங்களை அறுவடை செய்ய வேண்டும். மரங்களுக்கு தேவையான தொழு உரமிடவேண்டும். விவசாயிகள் வாழை, காய்கறிகள், பந்தல் காய்கறிகள், மரவள்ளி பயிர்கள் மற்றும் பூக்களை பாதுகாத்திட டிரைகோடெர்மாவிரிடி மற்றும் சூடோமோனாஸ் பூஞ்சான் உயிரியல் கொல்லி மருந்துகளை வேர்ப்பகுதியில் இட்டு நோய் வராமல் தடுக்க வேண்டும். மரத்தின் தண்டுப்பகுதியில் போர்டோ கலவையை தெளிக்க வேண்டும். 75 சதவீதத்திற்கு மேல் முதிர்ந்த தார்களை அறுவடை செய்யலாம். வாழை, வெங்காயம், மிளகாய் பயிர்களுக்கு உரிய காலத்தில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய வேண்டும். நீர்பாசனம், உரமிடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். மழை வெள்ளத்தின் போது பொதுமக்கள் நீர்நிலைகள், ஓடைகளை கடக்க வேண்டாம் என்றார்.

