/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம்
/
கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம்
ADDED : அக் 24, 2024 05:07 AM
கீழடி: கீழடியில் திறந்த வெளி அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு டெண்டர்கோரி இருக்கும்நிலையில் புதிதாக அமைக்கப்படும் அருங்காட்சியகம் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றுமா என வரலாற்று ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கீழடியில் 2015ம் ஆண்டு மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் அகழாய்வு மேற்கொண்ட போது 2600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் கட்டட கலை, விவசாயம், தொழில் மேலாண்மை, கால்நடை வளர்ப்பு, எழுத்தறிவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கண்டறியப்பட்டன. அதன்பின் தமிழக தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.
இந்நிலையில் தமிழக அரசு அகழாய்வு நடத்தும்இடங்கள் திறந்த வெளி அருங்காட்சியகமாக அமைக்கப்படும் என அறிவித்தது.
கீழடி, கொந்தகை, அகரம் உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு நடந்த இடங்களை 50 லட்ச ரூபாய் செலவில் திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்றியது.
ஆனால் கீழடி தவிர்த்து மற்ற இடங்களை பராமரிக்கமுடியாமல் அப்படியே கைவிட்டுவிட்டது. இதில் அகரம் திறந்த வெளி அருங்காட்சியகம் மூடப்பட்டு விட்டது. கீழடியில் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டுமே திறந்த வெளி அருங்காட்சியகமாக செயல்படுகிறது.
தற்போது கீழடியில் ஏழு கட்ட அகழாய்வு நடந்த இடங்கள் அனைத்தையும் திறந்த வெளி அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு 15 கோடியே 69 லட்ச ரூபாய் செலவில்திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்ற டெண்டர் கோரியுள்ளது.
வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகையில், திறந்த வெளி அருங்காட்சியகம் என்பதுஆய்வு செய்த இடங்களில் உள்ள உறைகிணறுகள்,பானைகள், செங்கல் கட்டுமானங்கள், ஓடுகள், உலைகலன்கள், இரட்டைப்பானைகள் உள்ளிட்டவற்றை நேரில் சென்று பார்க்கும்படி அமைக்க வேண்டும், இதற்காக அகழாய்வு இடங்களில் பாதுகாப்பாக இறங்கி சென்று பார்க்க ஏணிகள், அவசர கால வழிகள் என பாதுகாப்பு அம்சங்கள் இருக்க வேண்டும், நான்கரை ஏக்கர் பரப்பளவில் திறந்த வெளி அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ள நிலையில் ஒரு பாதையில் இறங்கி சென்று முழுவதுமாக பார்க்கும்படி அமைய வேண்டும், விளக்கமளிக்க வழிகாட்டிகள் நியமிக்க வேண்டும், 7ம் கட்ட அகழாய்வு நடந்த இடம் திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ள நிலையில் விளக்கமளிக்க யாருமே இல்லை.
சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து விட்டு செல்கின்றனர். பாண்டிய நாட்டின் அடையாளமான மீன் சின்னம் பொறிக்கப்பட்ட உறைகிணறு கூட அடையாளம் தெரியாத வண்ணம் உள்ளது. எனவே முறையாக திட்டமிட்டு வரலாற்று ஆய்வாளர்கள் கொண்ட குழுவின் ஆலோசனைப்படி திறந்த வெளி அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.
அப்போதுதான் வளரும் தலைமுறையினர் பண்டைய கால மக்களின் வாழ்வியலை முழுமையாக அறிந்து கொள்ள இயலும் என வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

