/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கலைத்திருவிழா முன்பதிவு துவக்கம்
/
கலைத்திருவிழா முன்பதிவு துவக்கம்
ADDED : மார் 21, 2025 06:12 AM
சிவகங்கை : கலைத்திருவிழாவில் பங்கேற்க விரும்பும் கலைக்குழுக்கள் மார்ச் 22, 23 தேதிகளில் அரசு மகளிர் கல்லுாரியில் பதிவு செய்யலாம் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
கலை பண்பாட்டு துறை சார்பில் சென்னையில் பொங்கல் விழாவின் போது நாட்டுப்புற கலை, அயல்மாநில நாட்டுப்புற கலை, செவ்வியல் கலைகள் இடம் பெறும் வகையில் 'சென்னை நம்ம ஊர் திருவிழா' சென்னையில் 18 இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கோயம்புத்தூர், தஞ்சாவூர், வேலூர், சேலம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், மதுரை மற்றும் திருச்சி ஆகிய 8 நகரங்களில் நடத்தப்பட்டது.
இந்த ஆண்டும் எட்டு நகரங்களில் கலை திருவிழா நடத்தப்பட உள்ளது. இந்த விழாவில் நிகழ்ச்சி நடத்த விரும்பும் கலை குழுக்களின் நிகழ்வுக்கான பதிவு அனைத்து மாவட்டங்களிலும் மார்ச் 22, 23ம் தேதிகளில் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை நடத்தப்படும்.
நையாண்டி மேளம், கரகம், காவடி, புரவி, காளை, மயில், பறை, பம்பை கை சிலம்பு ஆட்டம், இறை நடனம், துடும்பாட்டம், ஜிக்காட்டம், கிராமிய பாட்டு மற்றும் பல்சுவை நிகழ்ச்சி வழங்கும் கலைக்குழுக்கள் மார்ச் 22 அன்றும், தெருக்கூத்து, இசை நாடகம், நாடகம், கனியான் கூத்து, பொம்மலாட்டம், தோல்பாவை கூத்து, வில்லுப்பாட்டு, தேவராட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், மல்லர் கம்பம், கும்மி, கோலாட்டம், மரக்கால் ஆட்டம், பரதம், பழங்குடியினர் நடனம் நடத்துவோர் மற்றும் கலைக்குழு நிகழ்ச்சிக்கு மார்ச் 23ல் சிவகங்கை அரசு மகளிர் கல்லுாரியில் பதிவு செய்து கொள்ளலாம்.
மாநில அளவில் 8 இடங்களில் நடக்கும் விழாவில் சிறந்து விளங்கும் கலைக்குழுவை தேர்வு செய்து 2026ம் ஆண்டு நடக்கும்சென்னை சங்கமம் விழாவில் பங்கேற்க தேர்வு செய்யப்படுவார்கள். மாவட்ட அளவில் தேர்வில்பங்கு பெற விரும்பும் கலைக்குழு கலை பண்பாட்டு துறை இணையதளத்தில் (www.artandculture.tn.gov.in) மார்ச் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு சிவகங்கை பொறுப்பாளர் ராஜ்குமாரை 97863 41558 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம், என்றார்.