ADDED : பிப் 13, 2025 06:50 AM

சிங்கம்புணரி: தமிழக வேளாண்மைத் துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பயிர் மேலாண்மை இயக்ககத்தின் கீழ் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் இணைந்து தமிழ்நாடு வேளாண் வானிலை வலை இணைப்பை உருவாக்கியுள்ளது. மாநிலம் முழுவதும் 385 வட்டாரங்களில் சோலார் மூலம் இயங்கும் வகையில் இது அமைக்கப்பட்டது. இதன் மூலம் 10 வகையான வேளாண் வானிலை காரணிகள் சேகரிக்கப்பட்டு ஒவ்வொரு மணி நேர இடைவெளியில் இணையதளத்தில் வெளியிடப்படும்.
காற்றின் குறைந்தபட்ச, அதிகபட்ச வெப்பநிலை, ஈரப்பதம், வேகம், மண்ணின் வெப்பநிலை, மழையளவு, சூரிய கதிர்வீச்சு, வளிமண்டல அழுத்தம், இலை ஈரப்பதம் ஆகியவற்றை விவசாயிகள் அறிந்து கொள்ள முடியும். இந்த விவரங்களை பயன்படுத்தி வட்டார அளவிலான வானிலை சார்ந்த வேளாண் தொழில்நுட்பங்களை வேளாண் அலுவலர்கள் விவசாயிகளுக்கு வழங்குவர்.
இந்நிலையில் சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள இந்த வானிலை ஆய்வு கருவியை சுற்றி புதர் மண்டி கருவியை தேடும் நிலையில் உள்ளது. இதனால் மழையளவு உள்ளிட்டவற்றை கணக்கிடும் போது மாறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

