ADDED : அக் 14, 2024 08:35 AM

மழைக்கு இது வரை காரைக்குடியில் இருவர் பலியான நிலையில், ௧௩ வீடுகள் சேதமாகியுள்ளது. தமிழகத்தில் அக்., 14வரை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பேரிடர் மேலாண்மை துறை அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதே போன்று பலத்த மழை பெய்யும் மாவட்ட பட்டியலில் சிவகங்கையும் இருப்பதால், கடந்த 2 நாட்களாக மாவட்ட அளவில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் நல்ல மழை பெய்து வருவதால், அங்கிருந்து வரும் மழை நீர் சிங்கம்புணரி அருகே பாலாற்றில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது.
அதே போன்று, சிவகங்கை அருகே ஏரியூர் கண்மாய் நிரம்பி, 1944ல் கட்டப்பட்ட ஷட்டர்கள் வழியாக திறந்துவிடப்பட்டு, வெள்ள நீராக மணிமுத்தாறு ஆற்றில் செல்கிறது.
இந்த வெள்ள நீர் அரளிக்கோட்டை பகுதியில் உள்ள 8 கண்மாய்களை நிரப்பி, திருக்கோஷ்டியூர் வழியாக கல்லல் அருகே செவரக்கோட்டை அணைக்கட்டு வழியே மணிமுத்தாறு ஆற்றில் தேவகோட்டை வழியாக சென்று ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே கடலில் கலக்கிறது. இம்மாவட்டத்தில் இவ்விரு ஆறுகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், ஆறுகளை ஒட்டியுள்ள கண்மாய்கள் நிரம்பி வருகின்றன. இதன் மூலம் இந்த ஆண்டு விவசாயம் செழிக்கும் என மகிழ்ச்சியுடன் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து சில நாட்களாக பெய்து வரும் மழைக்கு, காரைக்குடியில் நீரில் மூழ்கி முதியவர் பலியானார்.
அதே போன்று, 2 கால்நடைகள் உயிரிழந்தது. மழையால் ௧௩ வீடுகள் வரை பகுதி, முழுமையாக சேதமானது.
மாவட்ட நிர்வாகம் மீட்பு பணிக்கான ஏற்பாடுகளை செய்துவருகிறது.
குறிப்பாக பொதுப்பணி, வருவாய், சுகாதாரம், மாநகராட்சி, நகராட்சி துறைகள் மீட்பு பணிகளில் சுணக்கம் காட்டாமல், முனைப்புடன் செயலாற்ற வேண்டும் என மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.