/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரியக்குடியில் பாலம், காரைக்குடியில் பைபாஸ் கைவிரிப்பு: மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு பலனில்லை
/
அரியக்குடியில் பாலம், காரைக்குடியில் பைபாஸ் கைவிரிப்பு: மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு பலனில்லை
அரியக்குடியில் பாலம், காரைக்குடியில் பைபாஸ் கைவிரிப்பு: மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு பலனில்லை
அரியக்குடியில் பாலம், காரைக்குடியில் பைபாஸ் கைவிரிப்பு: மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு பலனில்லை
ADDED : டிச 20, 2024 02:56 AM
சாக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட இலுப்பக்குடி, அரியக்குடி, பொன்நகர், லட்சுமி நகர் பகுதிகள் வளர்ந்து வரும் முக்கிய பகுதிகளாக உள்ளன. காரைக்குடியை ஒட்டி அமைந்துள்ள இப்பகுதிகள் தற்போது காரைக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வூராட்சிகளை சுற்றிலும் 40-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. காரைக்குடியில் இருந்து அரியக்குடி, இலுப்பக்குடி செல்லும் வழியில் ரயில்வே கிராசிங் உள்ளது. ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள், மற்றும் பள்ளி கல்லுாரி மாணவ மாணவிகள் இந்த ரயில்வே கிராசிங்கை பயன்படுத்தி வருகின்றனர்.
காரைக்குடி ரயில் நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள, இந்த வழியாக ஏராளமான ரயில்கள் சென்று வருகின்றன. ரயில்கள் செல்லும் போது, ரயில்வே கேட் மூடப்படுவதால் நீண்ட துாரம் வாகனங்கள் காத்துக் கிடக்கும் சூழல் நிலவுகிறது. இந்த ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் அமைப்பதற்கு தொடர்ந்து கோரிக்கை விடப்பட்டது. விரைவில் மேம்பாலம் அமைக்கப்படும் என பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்தனர்.
இதேபோல், காரைக்குடியில் இருந்து தேவகோட்டை ரஸ்தா வரை புறவழிச் சாலை அமைப்பதற்கான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு பயண தூரமும் நேரமும் குறையும் என எதிர்பார்ப்பு நிலவியது. பல ஆண்டுகளாக இப்பணிகள் நடைபெறும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இப்பணிகள் மேற்கொள்ள எந்த திட்டமும் இல்லை என அரியக்குடியை சேர்ந்த பழனியப்பன் கோரி இருந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
பழனியப்பன் கூறுகையில்: அரியக்குடி, இலுப்பக்குடியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை காரணமாக ரயில்வே கிராசிங்கில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. மேம்பாலம் அமைக்க தொடர்ந்து கோரிக்கை விடப்படுகிறது. மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் எந்த பணியும் தொடங்கப்படவில்லை. புறவழிச் சாலையும் இதே நிலையில் உள்ளது.
இதுகுறித்து ரயில்வே துறை மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்கப்பட்டது. ஆனால் இரு பணிகளுக்கும் இப்போது வரை எந்த முன்மொழிவும் இல்லை என தகவல் வந்துள்ளது. இது மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.