/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நெல் வாங்கி ரூ.1 கோடி மோசடி இருவர் மீது வழக்கு
/
நெல் வாங்கி ரூ.1 கோடி மோசடி இருவர் மீது வழக்கு
ADDED : மார் 27, 2025 03:00 AM
சிவகங்கை:தஞ்சாவூர் வியாபாரியிடம் ரூ. ஒரு கோடி மதிப்பிலான நெல் வாங்கி பணம் தராமல் ஏமாற்றியதாக இருவர் மீது சிவகங்கை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் 63. இவர் 40 ஆண்டாக நெல் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு 2023 செப்.25ல் ஒருவர் அலைபேசியில் பேசியுள்ளார். மதுரையில் ஜெயமணி டிரேடர்ஸ் என்ற பெயரில் கடை வைத்துள்ளதாகவும் தனக்கு நெல் வேண்டுமென்றும் நெல்லை லாரியில் ஏற்றிவிடவும், நெல் வந்தவுடன் அதற்கான பணத்தை அனுப்பி விடுவதாகவும்' கூறியுள்ளார்.
5 முறை கோபாலகிருஷ்ணன் அவர் கூறிய முகவரிக்கு நெல் மூடைகளை லாரியில் அனுப்பியுள்ளார். அதற்கான பணத்தை உடனுக்குடன் அந்த நபர் கோபாலகிருஷ்ணனின் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். பின்னர் தனக்கு அதிகப்படியான நெல் மூடை தேவைப்படுவதாகவும் அதை அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார். அதை நம்பிய கோபாலகிருஷ்ணன் அவருக்கு ரூ. ஒரு கோடியே 17 லட்சம் மதிப்பிலான நெல் மூடைகளை அனுப்பியுள்ளார். அதனை பெற்றுகொண்டவர் பணத்தை அனுப்பவில்லை. பணம் குறித்து கேட்டதற்கு மிரட்டுவதாக கோபாலகிருஷ்ணன் சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக சிவகங்கை மாவட்டம் எஸ்.புதுார் உலகம்பட்டி கருப்பையா மகன் கார்த்தி, புதுவயல் ஆறுமுகம் மகன் குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.மேல்விசாரணை நடக்கிறது.