ADDED : பிப் 01, 2024 11:44 PM
திருப்புத்துார்: திருப்புத்துாரில் கடைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் இருப்பது குறித்து தொழிலாளர் நலத்துறையினர் ஆய்வு நடத்தினர். இதில் இரு குழந்தை தொழிலாளர்கள் கண்டறியப்பட்டனர்.
திருப்புத்துார் கடைகளில் தொழிலாளர் உதவி ஆணையர் முத்து தலைமையில் மாவட்டக் குழந்தைகள் கடத்தல் தடுப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.
அதில் ஜவுளிக்கடை மற்றும் மளிகை கடைகளில் நடந்த ஆய்வில் 15 வயது சிறுமியும், 17 வயது சிறுவன் உள்ளிட்ட இரு குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் இருந்தது தெரியவந்தது . இருவரும் மீட்கப்பட்டு சிவகங்கையிலுள்ள குழந்தைகள் நல அலுவலகத்தில் ஆஜர்படுத்தபட்டனர்.
சட்டத்திற்குப் புறம்பாக குழந்தைகளை வேலைக்கு அமர்த்தியதற்காக சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் உதவி ஆணையர் கூறுகையில், குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை எவ்விதமான தொழில் களிலும், 18 வயதுக்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களிலும் பணியமர்த்துவது சட்டப்படி குற்றமாகும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
ஆய்வில் மாவட்ட குழந்தைகள் நல குழு உறுப்பினர் ஆஸ்வால்ட், மாவட்ட சட்டப்பணிகள் குழு உறுப்பினர் நாகேந்திரன், மாவட்ட குழந்தைகள் தடுப்பு பிரிவு காவல் துறை ராஜேஸ்வரி, திருப்புத்துார் தொழிலாளர் உதவி ஆய்வாளர் மகாலட்சுமி மற்றும் சைல்டு லைன் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

