
திருப்புவனத்தில் வாரம்தோறும் செவ்வாய் கிழமை காலை ஒன்பது மணி தொடங்கி இரவு 10:00 வரை காய்கறி சந்தை நடைபெறும்.
மதுரை மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள், கீரை வகைகளை வாங்கி வந்து 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் திருப்புவனத்தில் சந்தை நாளன்று விற்பனை செய்கின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பள்ளியில் தொடங்கி மணி மந்திர விநாயகர் கோயில் வரை சாலையை ஆக்கிரமித்து கடைகள் பரப்பி வைத்து வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர்.
தரை கடைகள் தவிர சரக்கு வேன், ஆட்டோ, தள்ளுவண்டி, டிரை சைக்கிள் என பல வாகனங்களை ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தி வியாபாரம் செய்கின்றனர். இதனால் 10 மீட்டர் அகலம் கொண்ட சாலை 5 மீட்டராக சுருங்கி பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லவே முடியவில்லை. இரண்டு கி.மீ., தூரம் உள்ள நகர்ப்பகுதியை கடக்க 30 நிமிடங்களுக்கும் மேல் ஆகி விடுவதால் பஸ்கள் அனைத்தும் பைபாஸ் ரோட்டிலேயே சென்று விடுகின்றன. சேதுபதிநகர் எதிரே போதிய இடவசதி இருந்தும் வியாபாரிகள் வேண்டுமென்றே ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கின்றனர்.
அதிவேகமாக வரும் கனரக வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து கூட்டத்தினுள் சென்றால் உயிர்ப்பலி ஏற்படுவது நிச்சயம். ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் வைத்திருப்பவர்களை அகற்ற வேண்டும்.
அவர்களிடம் பேரூராட்சி வரி வசூல் செய்ய கூடாது என நெடுஞ்சாலைத்துறை வலியுறுத்தியும், அதை மீறி கட்டணம் வசூலிப்பதால் வியாபாரிகள் மொத்தமாக சேர்ந்து கொண்டு போலீசாரையே மிரட்டுகின்றனர்.
இதனால் அதிகாரிகள் யாரும் கண்டு கொள்வதே கிடையாது. எனவே சந்தை நடத்துவதற்கான இடத்தில் கடைகளை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

