/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தென்மாவட்ட அளவில் ஆடு, கோழி, சேவல் விலை உயர்வு
/
தென்மாவட்ட அளவில் ஆடு, கோழி, சேவல் விலை உயர்வு
UPDATED : மார் 17, 2025 07:31 AM
ADDED : மார் 17, 2025 06:31 AM

திருப்புவனம் வட்டாரத்தில் ஆடு, கோழி, சேவல் உள்ளிட்டவைகள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. தென்மாவட்ட வியாபாரிகள் வாரம்தோறும் சந்தைக்கு வருவதுடன் கிராமங்களிலும் ஆடு, கோழி, சேவல் வாங்க திருப்புவனம் சுற்று வட்டார கிராமங்களுக்கு செல்வார்கள்.
திருப்புவனம் வட்டாரத்தில் அல்லிநகரம், கலியாந்துார், பழையனுார், மடப்புரம், ஏனாதி, தேளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வீடுகள் தோறும் ஆடு, கோழி, சேவல் வளர்க்கப்படுகிறது.
சாதாரண நாட்களில் ஒரு கிலோ எடையுள்ள சேவல் ரூ.200 ல் இருந்து 350 க்கும், 2.5 கிலோ எடை கொண்ட சேவல் ரூ.800க்கும் விற்கப்படும். ஆனால் தற்போது பங்குனி திருவிழாவிற்காக ஒரு கிலோ எடையுள்ள சேவல் ரூ.450 ல் இருந்து 500 வரை விற்கின்றன. அதே போல கோழிகளின் விலையும் 450(ஒருகிலோ) ரூபாயில் இருந்து ஆயிரத்து 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து திருப்புவனம் லட்சுமி கூறியதாவது, பங்குனியில் மாரியம்மன் கோயில் திருவிழாக்கள் நடைபெறும். குறிப்பாக திருப்புவனம், தாயமங்கலம், இருக்கன்குடி என தென்மாவட்ட அளவில் திருவிழாக்கள் நடைபெறும். மாரியம்மன் கோயில்களில் பலரும் கோழி, சேவல் நேர்த்தி செலுத்துவர். சாதாரண நாட்களில் சேவல்கள் அதிகம் வாங்குவதில்லை. பங்குனி திருவிழாவிற்கு சேவல்கள் அதிக விலைக்கு விற்கும்.
கோயில்களுக்கு செல்ல முடியாதவர்கள், கோயில் இருக்கும் திசையில் பொங்கல் வைத்து சேவல் பலியிட்டு வணங்குகின்றனர். இதனால் இவற்றின் விலை உயர்ந்துள்ளது. நேர்த்திக்கடனுக்காக விலை உயர்வை பொருட்படுத்தாமல் வாங்குகிறோம், என்றார்.
வியாபாரி செந்தில்குமார் கூறியதாவது, திருப்புவனத்தில் செவ்வாய் தோறும் நடக்கும் சந்தையில் குறைந்த பட்சம் ஆயிரம் முதல் ஆயிரத்து 500 கோழிகள் வரை விற்கப்படும். சமீப காலமாக கோழி, சேவல் வரத்து குறைந்து விட்டது. பங்குனி திருவிழாவிற்கான தேவை அதிகரித்துள்ளதால் விலை உயர்ந்துள்ளன, என்றார்.