/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வைகை ஆற்றில் குப்பைகள் கொட்டுவதால் தண்ணீரின் நிறம், சுவை மாறுவதாக புகார்
/
வைகை ஆற்றில் குப்பைகள் கொட்டுவதால் தண்ணீரின் நிறம், சுவை மாறுவதாக புகார்
வைகை ஆற்றில் குப்பைகள் கொட்டுவதால் தண்ணீரின் நிறம், சுவை மாறுவதாக புகார்
வைகை ஆற்றில் குப்பைகள் கொட்டுவதால் தண்ணீரின் நிறம், சுவை மாறுவதாக புகார்
ADDED : ஜூன் 30, 2025 06:46 AM
திருப்புவனம் : திருப்புவனம் வைகை ஆற்றில் இருந்து செயல்படுத்தப்படும் கூட்டு குடிநீர் திட்ட கிணறுகளில் உள்ள தண்ணீர் நிறம், சுவை மாறுபட்டு வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்புவனம் பகுதி வைகை ஆற்றில் இருந்து அருப்புக்கோட்டை, மதுரை, கட்டனூர், படமாத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக வைகை ஆற்றில் ஆழ்துளை மற்றும் திறந்தவெளி கிணறுகள் அமைத்து தண்ணீர் உறிஞ்சப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை சுவையுடனும் நல்ல நிறத்துடனும் இருந்த தண்ணீர் சமீப காலமாக பழுப்பு நிறமாக மாறியதுடன் சுவையும் மாறி கடினத்தன்மை மிகுந்து காணப்படுகிறது. இதுதவிர வைகை ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகளிலும் தண்ணீர் நிறம், சுவை மாறி வருகிறது. இதனால் பலரும் வைகை ஆற்று தண்ணீரை குடிக்க முடியாமல், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
வைகை ஆற்றில் நிலத்தடி நீரின் சுவை, நிறம் மாறியதற்கு வைகை ஆற்றில் கொட்டப்பட்டு வரும் குப்பைகளே காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து வைகை வடகரை கலாம் கார்த்திகேயன் கூறியதாவது, திருப்புவனம், புதூர், மடப்புரம், லாடனேந்தல் உள்ளிட்ட வைகை ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்படாமல் அப்படியே வைகை ஆற்றில் கொட்டி வருகின்றனர்.
பல ஆண்டுகளாக வைகை ஆற்றில் குப்பைகளை கொட்டி வருவதால் நிலத்தடி நீர் மாசுபட்டு வருகிறது. திருப்புவனம் நகரில் மட்டும் தினசரி 6 டன் குப்பைகள் வைகை ஆற்றில் கொட்டப்படுகிறது. வைகை ஆற்றில் குப்பைகள் கொட்டுவதை பொதுப்பணித்துறையும் கண்டு கொள்வதில்லை. 300 மீட்டர் அகலம் கொண்ட வைகை ஆறு தற்போது 150 மீட்டர் அகலத்தில் உள்ளது.
அந்தளவிற்கு பல இடங்களில் குப்பைகளை கொட்டி ஆற்றை சுருக்கி கொண்டு வருகின்றனர். 450 மீட்டர் அகலத்தில் தடுப்பணை கட்டப்படும் போது ஆற்றின் அகலமும் அதே அளவு இருந்திருக்க வேண்டும்.
ஆனால் பொதுப்பணித்துறை அலட்சியத்தால் வைகை ஆறு சுருங்கி வருவதுடன் நிலத்தடி நீரும் பாழாகி வருகிறது. வைகை ஆற்றில் இருந்து குடிநீர் விநியோகம் செய்வதை விடுத்து ஆற்றுப்படுகைக்கே காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் கொண்டு வருவது வேதனையான விஷயம், என்றார்.