/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கூட்டத்தில் குறிப்பு மட்டுமே எடுக்கப்படுகிறது; எந்த பணியும் நடப்பதில்லை என கவுன்சிலர்கள்
/
கூட்டத்தில் குறிப்பு மட்டுமே எடுக்கப்படுகிறது; எந்த பணியும் நடப்பதில்லை என கவுன்சிலர்கள்
கூட்டத்தில் குறிப்பு மட்டுமே எடுக்கப்படுகிறது; எந்த பணியும் நடப்பதில்லை என கவுன்சிலர்கள்
கூட்டத்தில் குறிப்பு மட்டுமே எடுக்கப்படுகிறது; எந்த பணியும் நடப்பதில்லை என கவுன்சிலர்கள்
ADDED : அக் 01, 2025 08:16 AM

காரைக்குடி மாநகராட்சி சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் நடந்தது. மேயர் முத்துத்துரை தலைமையேற்றார். கமிஷனர் சங்கரன், துணை மேயர் குணசேகரன் முன்னிலை வகித்தனர்.
36வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் தனம்: சத்தியமூர்த்தி 1, 2 வது வீதியில் குடிநீர் குழாய் பதிப்பு பணி காரணமாக சாலை முற்றிலும் சேதமடைந்து கிடக்கிறது. மன்ற கூட்டத்தில் கோரிக்கை வைத்தும் நடவடிக்கையும் இல்லை. ஒவ்வொரு கூட்டத்திலும் பணிகளுக்கு பொருள் வைக்கப்படுகிறது. ஆனால் டெண்டர் விடுவதில்லை.நாய்கள் தொல்லை தாங்க முடியவில்லை.
மேயர் முத்துத்துரை: அதிகாரிகள் கடந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் கூறிய பிரச்னைகளை குறித்து வைத்தீர்கள். சம்பந்தப்பட்ட இடத்தை அதிகாரிகள் பார்வையிட வேண்டும்.
நகர்நல அலுவலர் வினோத் : கால்நடை மருத்துவர்கள் மூலம் முகாம் நடத்தியும் வீதி வீதியாகவும் நாய்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதுவரை 487 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
31 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் பூமிநாதன்: கீழ ஊரணி தெற்கு வீதியில் சாலை மற்றும் சாக்கடை படுமோசமாக உள்ளது. 4 வருடமாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. பாதாள சாக்கடை பணி நடைபெறாததால் சாலை உட்பட பல்வேறு திட்டப் பணிகள் நடக்காமல் உள்ளது. 3 நாட்களாக குப்பை வாங்கவில்லை. கேட்டால் புதிதாக மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு பணியாளர்கள் சென்று விட்டனர் என்கின்றனர்.
கமிஷனர் சங்கரன்: பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் இன்னும் ஆயிரத்து 800 ஆள்நுழைவு தொட்டி பதிக்க வேண்டியுள்ளது. மீண்டும் பாதாள சாக்கடை பணி தொடங்கியுள்ளது. இதுவரை 100 ஆள் நுழைவு தொட்டி பதிக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்ட பணிகள் 2028 வரை உள்ளது. பணிகள் மந்தமாக நடைபெறுகிறது. துரிதப்படுத்த தெரிவித்துள்ளோம். 3 நாட்களாக குப்பை வாங்கவில்லை என்றால் புகார் அளிக்கலாம்.
22வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் ராம்குமார்: முத்தூரணியை சுற்றியுள்ள கம்பிகள் அனைத்தும் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது.
முடியரசன் சாலை பூங்காவில் புதிய மாநகராட்சி கட்டடம் கட்டப்படுவதாக தெரிவிக்கின்றீர்கள். மக்கள் அதிகம் பயன்படுத்திய பூங்காவை அழித்து எதற்காக புதிய கட்டடம் கட்ட வேண்டும். தவிர, வருவாய் நிதி 2022--23 கீழ் பூங்கா பராமரிப்பு பணி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வாங்க என ரூ.20 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது.
கமிஷனர் சங்கரன்: பூங்கா இடம் தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
3வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் மைக்கேல் ராஜ்: எனது வார்டு தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக பணிகள் ஒதுக்கவில்லை. அய்யனார் கோயிலை சுற்றி வேலி அமைக்க கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. வேலைகளுக்கு மன்ற பொருள் வைக்கப்படுகிறது ஆனால் பணிகள் நடைபெறுவதில்லை.
மேயர் முத்துத்துரை: அதிக நிதி ஒதுக்கப்பட்ட வார்டு 3வது வார்டு. பணிகள் அதிகம் வழங்கப்பட்டுள்ளது.