/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மண்ணும் பொன்னாகும் மண்பாண்ட பொருட்கள்
/
மண்ணும் பொன்னாகும் மண்பாண்ட பொருட்கள்
ADDED : அக் 01, 2025 08:59 AM

மண்ணும் பொன்னாகும் என்ற பழமொழிக்கேற்ப மானாமதுரையில் மண்ணால் தயாரிக்கக்கூடிய மண்பாண்ட பொருட்கள் பிரசித்தி பெற்று விளங்கி வருகிறது.
மானாமதுரை மண்பாண்ட பொருட்கள் இசை உலகிலும் மிகவும் முக்கியமானதாகும்.
இசை கருவியான கடம் மானாமதுரையில் தயாரிக்கப்படுவது கூடுதல் சிறப்பாக உள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 300க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் சீசனுக்கு தகுந்தாற்போல் மண்பாண்ட பொருட்களை தயார் செய்து வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையின் போது புதிய மண்பானையில் பொங்கல் வைப்பதற்காக மானாமதுரையில் வருடம் தோறும் பொங்கல் பானை தயாரிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் திருக்கார்த்திகை விழாவிற்காக நூற்றுக்கும் மேற்பட்ட வகைகளில் விளக்குகள் தயார் செய்யப்படுகிறது. அதே போன்று விநாயகர் சதுர்த்தியின் போது ரூ.10 முதல் ரூ.20 ஆயிரம் வரையிலான களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளும் ஆயிரக்கணக்கில் தயார் செய்யப்பட்டு தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.
இயற்கையோடு ஒன்றிப்போன தமிழர்களின் பண்டிகைகள் மற்றும் விழாக்களில் மானாமதுரை மண்பாண்ட பொருட்கள் ஒன்றிப்போனதை தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது.
இத்தனை சிறப்பு வாய்ந்த மானாமதுரை மண்பாண்ட பொருட்களை சமையலிலும் பொதுமக்களுக்கு மிகவும் இன்றியமையாததாக விளங்கி வருகிறது.
மண்பாண்ட சட்டிகளில் தயாராகும் உணவு மிகவும் ருசியாகவும், தரமாகவும், உடல் நலத்திற்கு அதிக நன்மை இருப்பதால் டாக்டர்கள் மண்பாண்ட சமையலுக்கு பரிந்துரை செய்வதினால் தற்போது பெரும்பாலான ஓட்டல்களில் மண்பாண்ட சமையல் பிரபலமாகி வருவதை ஏராளமானோர் வீடுகளிலும் மண்பாண்ட சமையலுக்கு மாறியுள்ளனர்.