/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
புறநகர் விரிவாக்கமின்றி சிங்கம்புணரியில் நெருக்கடி! குறைந்த பரப்பில் பெருகும் குடியிருப்புகள்
/
புறநகர் விரிவாக்கமின்றி சிங்கம்புணரியில் நெருக்கடி! குறைந்த பரப்பில் பெருகும் குடியிருப்புகள்
புறநகர் விரிவாக்கமின்றி சிங்கம்புணரியில் நெருக்கடி! குறைந்த பரப்பில் பெருகும் குடியிருப்புகள்
புறநகர் விரிவாக்கமின்றி சிங்கம்புணரியில் நெருக்கடி! குறைந்த பரப்பில் பெருகும் குடியிருப்புகள்
ADDED : அக் 31, 2025 11:31 PM

மாவட்டத்தில் முக்கிய தொழில் வர்த்தக நகரான சிங்கம்புணரியில் நாளுக்கு நாள் போக்குவரத்து, இட நெருக்கடி அதிகரித்து வருகிறது. காரைக்குடி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இந்நகர் அமையப் பெற்றுள்ளதால், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், வீடுகள் அனைத்தும் இந்த நெடுஞ்சாலையை ஒட்டியே கட்டமைக்கப்பட்டு வருகிறது.
இதனால் குறுகிய நிலப்பரப்பில் மக்கள் அடர்த்தி வேகமாக அதிகரித்து வருகிறது. தாலுகா, பேரூராட்சி, ஒன்றிய அலுவலகங்கள், கால்நடை மருத்துவமனை, போலீஸ் ஸ்டேஷன் என பெரும்பாலான அரசு கட்டடங்கள் நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியிலேயே அமைந்துள்ளது. வெளியூர்களில் இருந்து அரசு, தனியார் பணிகளுக்காக இங்கு வருபவர்கள், அனைத்து வசதிகளும் கிடைப்பதால் இங்கேயே இடம் வாங்கி தங்கி விடுகின்றனர்.
நாளுக்கு நாள் குடியிருப்பு பெருகி மக்கள் நெருக்கமும் வாகன போக்குவரத்தும் அதிகரித்து வருகிறது. ஆனால் புறநகர் விரிவாக்கம் தடைபட்டுள்ளது. அவசர காலங்களில் சிங்கம்புணரி கடை வீதியை கடந்து செல்வதே வாகன ஓட்டிகளுக்கு பெரிய பிரச்னையாக உள்ளது.
சிங்கம்புணரி நகரை கடந்து செல்ல முறையான புறநகர் சாலை இல்லாததும், புறநகர் விரிவாக்கத்திற்கு போதிய நடவடிக்கை இல்லாததும் இப்பிரச்னைகளுக்கு காரணமாக உள்ளது. இப்பேரூராட்சியை சுற்றியுள்ள சில கிராமங்களை இணைத்து நகராட்சியாக மாற்றினால், நிரந்தர தீர்வு கிடைக்கும்.
அதிகாரிகளும் அதற்கான ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆனால் என்ன நடந்ததோ நகராட்சி பட்டியலில் சிங்கம்புணரி பெயர் இடம் பெறவில்லை. மாறாக அணைக்கரைப்பட்டியில் சில வார்டுகள் மட்டும் சிங்கம்புணரி பேரூராட்சியுடன் இணைக்கப்படும் என அரசு அறிவித்தது. அதுவும் பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் நகரில் குப்பை, கழிவு நீர் உள்ளிட்டவற்றை கையாள்வதில் நடைமுறை சிக்கல் ஏற்படுகிறது.
பேரூராட்சி பணியாளர்களின் எண்ணிக்கையை விட குப்பை, கழிவுநீர் பணிகளுக்கான ஆட்கள் தேவை அதிகமாக உள்ளது. அதேபோல் சிங்கம்புணரியை ஒட்டிய சில ஊராட்சிகள் நகர் பகுதியை போல் வளர்ச்சி கண்டு வரும் நிலையில், அங்கு ஊராட்சி நிதியை கொண்டு போதிய சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.
சிங்கம்புணரியில் புறநகர் விரிவாக்கம் செய்து, அரசு அலுவலகங்களை பரவலாக பல்வேறு இடங்களில் கட்டமைத்து, மக்கள் நடமாட்டத்தை பரவல் படுத்தினால் மட்டுமே நெருக்கடி குறையும். எனவே மாவட்ட நிர்வாகமும் மக்கள் பிரதி நிதிகளும் எதிர்கால தேவையின் அடிப்படையில் நகர் கட்டமைப்பு மற்றும் புறநகர் விரிவாக்க திட்டங்களை ஆலோசித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

