/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை மாவட்ட பெருமாள் கோயில்களில் தரிசனம்
/
சிவகங்கை மாவட்ட பெருமாள் கோயில்களில் தரிசனம்
ADDED : செப் 22, 2024 04:21 AM

திருக்கோஷ்டியூர் : திருப்புத்துார் வட்டார பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனி உத்ஸவ துவக்கத்தை முன்னிட்டு பக்தர்கள் அதிகாலை முதல் சுவாமி தரிசனம் செய்தனர்.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் காலை 7:00 மணிக்கு மூலவர் சன்னதிக்கு முன் மண்டபத்தில் உற்ஸவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து தீபாராதனை நடந்தது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு காலை முதல் மதியம் வரை அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாட்டினை கண்காணிப்பளர் சேவற்கொடியோன் செய்தார்.
கல்லல் ஒன்றியம் கொங்கரத்தி வன்புகழ் நாராயணப் பெருமாள் கோயிலில் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மூலவர் நின்ற கோலத்தில் சர்வ அலங்காரத்தில் அருள்பாலித்தார். உற்ஸவர் கருட வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். பக்தர்கள் உற்ஸவருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
திருப்புத்துார் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் காலை 7:00 மணிக்கு மூலவருக்கு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் காலை 10:00 மணிக்கு உற்ஸவருக்கு அபிேஷகம் நடந்து, ஸ்ரீதேவி, பூதேவியுடன் சர்வ அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
தொடர்ந்து தீபாராதனை நடந்தது. இரவில் கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா நடந்தது.
பக்தர்களின் வசதிக்காக திருக்கோஷ்டியூர், கொங்கரத்திக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.