/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் குடியிருப்பை மழை நீர் சூழ்வதால் சிரமம்! பொறுப்பை தட்டிக்கழிக்கும் அரசு துறைகளால் பாதிப்பு
/
மானாமதுரையில் குடியிருப்பை மழை நீர் சூழ்வதால் சிரமம்! பொறுப்பை தட்டிக்கழிக்கும் அரசு துறைகளால் பாதிப்பு
மானாமதுரையில் குடியிருப்பை மழை நீர் சூழ்வதால் சிரமம்! பொறுப்பை தட்டிக்கழிக்கும் அரசு துறைகளால் பாதிப்பு
மானாமதுரையில் குடியிருப்பை மழை நீர் சூழ்வதால் சிரமம்! பொறுப்பை தட்டிக்கழிக்கும் அரசு துறைகளால் பாதிப்பு
ADDED : ஆக 13, 2024 12:16 AM

மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட 1வது வார்டான காட்டு உடைகுளத்தில் தென்றல் நகர், கணபதி நகர், யு.கே., நகர் சூர்யா நகர், உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இப்பகுதியை ஒட்டி காட்டு உடைகுளம், நாடாம்பியேந்தல் கண்மாய்கள் உள்ளன. மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்ததால் இந்த பகுதி கண்மாய்கள் தற்போது நிரம்பும் நிலையில் உள்ளது.
இக்கண்மாய்களில் தேங்கும் தண்ணீர் மூலம் பாசன வசதி இல்லாததாலும், மடைகளை சீரமைக்காத காரணத்தினாலும் அதிலிருந்து வெளியேறும்தண்ணீர் மேற்கண்ட பகுதிகளை சூழ்ந்து கொள்வதால் மக்கள் வெளியே செல்ல முடியாத நிலை நிலவி வருகிறது.
அவசர காலங்களில் 108 ஆம்புலன்ஸ் மற்றும் ஆட்டோக்கள் கூட இப்பகுதிக்கு வர மறுப்பதால் ஒரு சில நேரங்களில் உயிர் பலியும் ஏற்பட்டு வருகிறது.
இப்பகுதி மக்கள் கூறியதாவது:
கடந்த 15 வருடங்களுக்கு முன்பாக நாங்கள் இப்பகுதியில் முறையாக பிளாட் வாங்கி பிளான் அப்ரூவல் பெற்று வீடுகளை கட்டியுள்ளோம். இப்பகுதியில் உள்ள கண்மாய்களை முறையாக சீரமைக்காத காரணத்தினால் மழைக்காலங்களில் வீடுகளை மழை நீர் சூழ்ந்து கொள்வதால் சிரமப்படுகிறோம்.
தற்போது மானாமதுரை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 2 வருடங்களாகயும் நகராட்சி அதிகாரிகளிடம் இதனை சரி செய்ய கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர்.
நகராட்சி 1வது வார்டு கவுன்சிலர் தேன்மொழி: இப்பகுதியில் உள்ள கண்மாய்களை சீரமைக்க வேண்டுமென்று நகராட்சி நிர்வாகத்திடம் கூறினால் அவர்கள் இது எங்கள் கட்டுப்பாட்டில் வராது என்றும்ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் வருகிறது என்று கூறுகின்றனர்.
ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் கேட்டால் அவர்கள் எங்கள் கட்டுப்பாட்டில் வரவில்லை என்று மாறி,மாறி பொறுப்பை தட்டிக் கழித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.
மழைக்காலம் ஆரம்பிக்கும் முன்னரே வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளதால் இனி வரும் காலங்களில் மேலும் மழை பெய்யும் சூழ்நிலையில் வீடுகள் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. இங்கு முறையாக கால்வாய் வசதி செய்து தண்ணீரை வெளியேற்ற வேண்டும்.
மாவட்ட நிர்வாகம் உடனடியாக இப்பகுதியில் உள்ள கண்மாய் மடைகளை சீரமைத்து குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.