/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் வைரஸ் காய்ச்சல் அதிகரிப்பு; பாதிக்கப்பட்டோருக்கு டாக்டர்கள் ஆலோசனை
/
சிவகங்கையில் வைரஸ் காய்ச்சல் அதிகரிப்பு; பாதிக்கப்பட்டோருக்கு டாக்டர்கள் ஆலோசனை
சிவகங்கையில் வைரஸ் காய்ச்சல் அதிகரிப்பு; பாதிக்கப்பட்டோருக்கு டாக்டர்கள் ஆலோசனை
சிவகங்கையில் வைரஸ் காய்ச்சல் அதிகரிப்பு; பாதிக்கப்பட்டோருக்கு டாக்டர்கள் ஆலோசனை
ADDED : நவ 02, 2025 04:23 AM
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்துக்கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் பல இடங்களில் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. சளித்தொல்லை, படபடப்புடன் கூடிய காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். லேசான மூச்சுத்திணறலும் ஏற்படுகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கூட்டம் அதிகமாகிறது.
மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவிற்கு தினமும் வருபவர்களில் 70 சதவீதம் பேர் காய்ச்சல் பாதிப்பால் தான் வருகின்றனர். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரியில் தினசரி 30க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 20 குழந்தைகள் உட்பட 48 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு தட்ப வெப்பநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறிப்பாக குளிர் தான் காரணம் என கூறப்படுகிறது.
டாக்டர்கள் கூறியதாவது: ஆண்டுதோறும் அக்., நவ., டிச., மாதங்களில் தட்ப வெப்பநிலை மாற்றத்தால் வைரஸ் காய்ச்சல் பரவுவது உண்டு. அக்.,15 முதல் தமிழகத்தில் குளிரும் பனி பரவலும் உள்ளது. இதன் தாக்கத்தால் தான் சளித்தொல்லையுடன் கூடிய காய்ச்சல் பரவி வருகிறது. இது விஷக்காய்ச்சல் அல்ல, வைரஸ் காய்ச்சல் தான். பனிக்காலம் என்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டோரில் 10 சதவீதம் பேருக்கு வயிற்று போக்கு உள்ளது. எனவே லேசான காய்ச்சல் வந்தாலும் டாக்டர்களின் ஆலோசனை பெற வேண்டும். அலட்சியம் காட்டினால் சிக்கலாகி விடும். பொதுவாக 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பனிக் காலத்தால் பாதிப்பு வரும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். அதிகாலை, மாலை நேரங்களில் வெளியே விட வேண்டாம். 60 வயதுக்கு மேற்பட்டோர் அதிகாலை நடைபயிற்சியை கைவிடுவது நல்லது. தலையில் மப்ளர் கட்டிக்கொள்வது, ஸ்வெட்டர் அணிவது அவசியம். அலட்சியம் காட்டினால் உடலில் வெப்ப இழப்பு ஏற்பட்டு திடீர் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புண்டு.
மார்புச்சளி உருவாகி, மூச்சுத்திணறும் நிலை வரும். வீடுகளில் ஏசி போட வேண்டாம். காற்றோட்டத்துக்கு மின் விசிறி போதுமானது. பூச்சிகளால் பாதிப்பு வரலாம் என்பதால் ஜன்னலில் தடுப்பு வலை அமைப்பது நல்லது. லேசான காய்ச்சல் வந்தால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். கடைகளில் மாத்திரை வாங்கி சாப்பிட வேண்டாம் என்றனர்.

