/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கிராமங்களுக்கு வர மறுக்கும் டவுன் பஸ்கள்: பயணிகள் தவிப்பு
/
கிராமங்களுக்கு வர மறுக்கும் டவுன் பஸ்கள்: பயணிகள் தவிப்பு
கிராமங்களுக்கு வர மறுக்கும் டவுன் பஸ்கள்: பயணிகள் தவிப்பு
கிராமங்களுக்கு வர மறுக்கும் டவுன் பஸ்கள்: பயணிகள் தவிப்பு
ADDED : நவ 02, 2025 04:23 AM
திருப்பாச்சேத்தி: திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் பிரதான சாலையுடன் திரும்பி விடுவதால் கிராம மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
துாதை, மழவராயனேந்தல், சொக்கநாதிருப்பு, பழையனுார் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து மதுரை மத்திய பேருந்து நிலையத்திற்கு தினசரி இரண்டு முதல் ஐந்து முறை டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. டவுன் பஸ்களை நம்பி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் சென்று வருகின்றனர். மதுரை நகரில் கூலி வேலை செய்து வரும் கிராம மக்கள் இரவில் கிராமங்களுக்கு செல்லும் கடைசி டவுன் பஸ்சை நம்பியே உள்ளனர்.
சமீப காலமாக ரோடு சரியில்லை. மரங்கள், வேகத்தடை அதிகளவில் உள்ளன என கூறி கிராமங்களுக்கு டவுன் பஸ்கள் வருவதே இல்லை. இதனால் கிராம மக்கள் ஷேர் ஆட்டோக்களில் சென்று வர வேண்டியுள்ளது.
பஸ்கள் வர மறுப்பது குறித்து புகார் அளித்தாலும் கண்டு கொள்வது கிடையாது. துாதை, தவத்தாரேந்தல் உள்ளிட்ட கிராமங்களுக்கு டவுன் பஸ்கள் முறையாக வந்து செல்வது கிடையாது.
துாதை சங்குபாண்டி கூறுகையில்: தினசரி ஐந்து முறை டவுன் பஸ் வந்து செல்லும், தற்போது காலை ஏழு மணிக்கு மட்டும் வருகிறது. மற்ற நேரங்களில் துாதை விலக்கிலேயே பயணிகளை இறக்கி விட்டு விடுகின்றனர். இரவு பத்து மணிக்கு வரும் டவுன் பஸ் துாதை என பெயர் பலகை வைத்து கிளம்பினாலும் திருப்புவனத்துடன் திருப்பி விடுகின்றனர். இதனால் ஷேர் ஆட்டோக்களை நம்பியே செல்ல வேண்டியுள்ளது. கிராம மக்கள் சார்பாக தூதை கிராமத்திற்குள் செல்லும் ரோட்டின் இருபுறமும் உள்ள மர கிளைகளை வெட்டி அகற்றி விட்டோம், ரோட்டையும் சரி செய்துள்ளோம், ஆனாலும் ரோடு சரியில்லை, பஸ்சை திருப்ப முடியவில்லை என கூறி வர மறுக்கின்றனர், என்றார்.
பணிமனை மேலாளர் உமாகண்ணன் : துாதை ஊருக்குள் இருமுறை சரியாக சென்று வருகிறது. குறுகலான ரோடு, எதிரே வாகனங்கள் வந்தால் விலக முடிவதில்லை. நீண்ட துாரத்திற்கு ரிவர்ஸ் எடுத்து வர வேண்டியுள்ளது. மின் கம்பிகளும் தாழ்வாக செல்வதால் அச்சத்துடனேயே பஸ்சை இயக்க வேண்டியுள்ளது. முறையாக டவுன் பஸ் சென்று வருகிறது, என்றார்.

