ADDED : ஆக 12, 2025 05:49 AM

திருப்புவனம், : திருப்புவனம் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டு வரும் தடுப்பணைக்கு இருபுறமும் கரை அமைக்கும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
வைகை ஆற்றில் திருப்புவனம் புதுாரில் கானுார், பழையனுார் கண்மாய் பாசன தேவைக்காக 40 கோடியே 27 லட்ச ரூபாய் செலவில் 410 மீட்டர் நீளத்தில் நீளமான தடுப்பணை பணிகள் நடந்து வருகின்றன.
இறுதி கட்டத்தில் பணி நடந்து வரும் நிலையில் வரும் செப்டம்பரில் வடகிழக்கு பருவமழையின் போது தடுப்பணைக்கு தண்ணீரை முழுமையாக கொண்டு வர இருபுறமும் தலா ஆயிரத்து 500 மீட்டர் நீளத்தில் கரை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், பழையனுார், கானுார் ஆகிய இரு பெரிய ஆயக்கட்டுகளிலும் 4ஆயிரத்து 700 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் நீளமான தடுப்பணை கட்டுமான பணி நிறைவு பெறும் நிலையில் உள்ளன.
வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், ஆற்றில் வரும் மழை தண்ணீர் உள்ளிட்டவை தங்கு தடையின்றி தடுப்பணையில் சேரும் வண்ணம் ஆற்றின் இருபுறமும் கரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கரைகளின் மீது மக்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் நடந்து செல்லும் வகையில் பாதை இருக்கும் என்றனர்.
தடுப்பணை கட்டுமான பணிகளை உதவி கோட்ட பொறியாளர் ராஜ்குமார், உதவி பொறியாளர்கள் சுரேஷ்குமார், வினோத்குமார், அழகுராஜா உள்ளிட்டோர் மேற்பார்வையிட்டனர்.