/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கோட்ட அலுவலகங்கள் அதிகரிக்க எதிர்பார்ப்பு
/
கோட்ட அலுவலகங்கள் அதிகரிக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 04, 2025 12:56 AM

சிவகங்கை மாவட்டத்தில் முன்பு 6 தாலுகாக்கள் இருந்த போது சிவகங்கை மற்றும் தேவகோட்டையில் வருவாய் கோட்ட அலுவலகங்கள் செயல்பட்டன. தற்போது சிவகங்கை, மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம், காளையார்கோவில், தேவகோட்டை, காரைக்குடி, திருப்புத்தூர் மற்றும் சிங்கம்புணரி. என ஒன்பது தாலுகாக்களாக அதிகரித்தும் கோட்ட அலுவலகங்கள் அதிகரிக்கப்படவில்லை.வேலை பளுவால் மக்களின் கோரிக்கை ஆமை வேகத்திலேயே விசாரிக்கப்படுகின்றன.
திருப்புத்துார் தாலுகாவிலிருந்து முதலில் காரைக்குடியும், அதன் பின்னர் சிங்கம்புணரியும் தனித் தாலுகாவாக பிரிக்கப்பட்டது. 1989 ல் எஸ்.புதுார் தனி ஒன்றியம், சிங்கம்புணரி தனித்தாலுகா பிரிப்பு குறித்து திட்டமிட்டபோது திருப்புத்துாரில் ஆர்.டி.ஓ. அலுவலகம் துவக்குவது குறித்தும் வருவாய்த்துறையினரால் ஆலோசிக்கப்பட்டது. ஆனால் சிங்கம்புணரி தனித்தாலுகாவாக பிரிக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் திருப்புத்துாரில் கோட்ட அலுவலகம் துவக்குவது சம்பந்தமான எந்த ஆலோசனையும், திட்டமிடலும் அரசுத் தரப்பில் மேற்கொள்ளவில்லை.
இதனால் திருப்புத்துார், சிங்கம்புணரி பகுதி எல்லைக் கிராமங்கள், எஸ்.புதுார் ஒன்றிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பட்டா, நத்தம் பட்டா குறித்த மேல்முறையீடு, பதிவு செய்யாத பிறப்பு,இறப்பு சான்றிதழ் உள்ளிட்டவற்றை பெற இரு பஸ்கள் மாறி தேவகோட்டை செல்ல வேண்டியுள்ளது. தற்போது தேவகோட்டை கோட்ட அலுவலகத்தில் திருப்புத்துார், சிங்கம்புணரி நிலம் சம்பந்தமாக மனுக்களே அதிகமாக விசாரணைக்கு உள்ளன. மனுக்கள் விசாரணையை வேகப்படுத்த திருப்புத்துார்,சிங்கம்புணரி உள்ளிட்ட தாலுகாவிற்கு தனியாக கோட்ட அலுவலகம் அமைக்க இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.
வக்கீல் முருகேசன் கூறுகையில், 'திருப்புத்துார்,சிங்கம்புணரி தாலுகா பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மனுக்கள் தேவகோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிலுவையில் உள்ளன. எஸ்.புதுார் ஒன்றிய எல்லைக் கிராம பகுதியிலிருந்து 70 கி.மீ. பயணம் செய்து கோட்டாட்சியரை சந்திக்க வேண்டியுள்ளது. இரு பகுதியினருக்கும் திருப்புத்துாரில் கோட்டாட்சியர் அலுவலகம் துவக்கலாம். தற்காலிகமாக திருப்புத்துார் தாலுகா அலுவலகத்தில் உள்ள கூடுதல் கட்டட வசதியுள்ளதால் கோட்டாட்சியர் வாரம் இருமுறை முகாம் அலுவலகம் நடத்தலாம் என்றார்.
வக்கீல் பழனிச்சாமி கூறுகையில், 'பொதுவாக திருப்புத்துார்,சிங்கம்புணரி பகுதி நிலம் சம்பந்தமாக மேல்முறையீட்டிற்காக அதிகமானோர் தேவகோட்டை செல்ல வேண்டியுள்ளது. இதற்காக ஒரு நாளை அவர்கள் ஒதுக்க வேண்டியுள்ளது. அவர்களின் வீண் அலைச்சலைக் குறைக்கவும், கோட்டாட்சியர் வேலைப் பளுவைக் குறைக்கவும் திருப்புத்துார்,சிங்கம்புணரி தாலுகாக்களுக்கு புதிய கோட்ட அலுவலகம் திருப்புத்துாரில் அமைக்க வேண்டியது அவசியமாகும்.' என்றார்.
வருவாய்த்துறையினர் கூறுகையில், 'இதுவரை திருப்புத்துார் புதிய கோட்டாட்சியர் அலுவலகம் துவக்குவது சம்பந்தமாக பரிசீலனை ஏதும் இல்லை.' என்றனர். புதிய கோட்ட அலுவலகம் துவக்குவது குறித்து அரசு பரிசீலிக்க வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்கவும், முன்னதாக திருப்புத்துாரில் முகாம் கோட்ட அலுவலகம் நடத்தவும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.