/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மழையை எதிர்பார்த்து விதைப்பு பணியில் விவசாயிகள்
/
மழையை எதிர்பார்த்து விதைப்பு பணியில் விவசாயிகள்
ADDED : செப் 27, 2024 06:33 AM

திருப்புத்துார்: திருப்புத்துார் கண்மாய்களில் போதிய நீர் இல்லாததால் நேரடியாக வயல்களில் விதைத்த விவசாயிகள் மழையை எதிர்பார்த்துள்ளனர்.
திருப்புத்துார் பகுதியில் பருவ மழை பொய்ப்பதும், ஆற்றில் நீர் வரத்தின்றி போவதும் நெல் விவசாயிகளின் நடைமுறைகளை மாற்றி வருகிறது.
ஆடிப்பட்டத்தில் விதைப்பது என்பதை விவசாயிகள் கை விட்டு விட்டனர். தாமதமாக நாற்று வாங்கி நடவு செய்கின்றனர். அல்லது நேரடி விதைப்பில் ஈடுபடுகின்றனர்.
இந்த ஆண்டும் கடந்த ஒரு மாதமாக போதிய மழை பெய்யவில்லை. இதனால் உழுத நிலங்கள் காய்ந்து வருகின்றன. கிணற்று பாசன விவசாயிகள் தவிர மற்றவர்கள் நாற்றங்கால் நடவு செய்யவில்லை.
குக்கிராமமான கொள்ளுகுடிப்பட்டியில் 100 ஏக்கரில் நெல் சாகுபடி நடைபெறும். இங்கு முன்பு தொழி அடித்து நடவு செய்வது வழக்கம். போதிய நீர் இன்றி விவசாயிகள்
கடந்த மாதம் வயல்களில் நேரடியாக விதைத்துள்ளனர். 60 ஏக்கர் பரப்பளவில் விதைப்பு நடந்துள்ளது. ஆனால் அதன் பின்னர் மழை பெய்யாததால் கவலை அடைந்துள்ளனர்.
விவசாயி வெற்றிவேல் கூறியதாவது: முன்பு உழுதபின் நீர் பாய்ச்சி அதில் உள்ள செடி, கொடிகளை அழுக விடுவோம். அதன் பின்னரே நாற்றங்காலிலிருந்து நாற்று எடுத்து நடவு செய்வோம். தொழி நடவு மூலம் பயிர்கள்
செழித்து வளரும். இப்போது போதிய மழை இல்லை. இதனால் வறட்சியாக இருப்பதால் நேரடி விதைப்பாக விதைத்துள்ளோம். இன்னமும்
மழை பெய்யவில்லை. இப்படியே போனால் பயிர்கள் முளைத்து வளராது கருகிவிடும். கடந்த ஆண்டு மழை ஏமாற்றி சாகுபடி பாதித்தது. காப்பீடு கிடைக்கவில்லை.
இந்த ஆண்டாவது இனியாவது மழை பெய்து காப்பாற்ற வேண்டும்' என்றார்.
மழைக்காக காத்திருக்கும் விவசாயிகளை இனி துவங்க உள்ள வடகிழக்கு பருவமழைதான் காப்பாற்ற வேண்டும்.