/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வாழை இலைக்கு நிரந்தர விலை விவசாயிகள் வலியுறுத்தல்
/
வாழை இலைக்கு நிரந்தர விலை விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : செப் 30, 2025 04:14 AM

திருப்புவனம்: திருப்புவனத்தில் வாழை இலைகளுக்கு நிரந்தரமாக விலை நிர்ணயம் செய்ய விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்புவனம் தாலுகாவில் நெல், தென்னைக்கு அடுத்தபடியாக வாழை விவசாயம் கலியாந்துார், திருப்பாச்சேத்தி, கானுார், மாரநாடு, கல்லுாரணி, மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படுகிறது. ஏக்கருக்கு ஆயிரம் கன்று வீதம் பயிரிடப்பட்டு 10 மாதங்களுக்கு பிறகு வாழை இலை அறுவடை தொடங்கும். ஏக்கருக்கு ஒரு லட்ச ரூபாய் வரை செலவு செய்யும் விவசாயிகளுக்கு இலை அறுவடை மூலம் லாபம் கிட்டுகிறது. ஏக்கருக்கு சுழற்சி முறையில் எட்டு கட்டுகள் ( ஒரு கட்டு 200 இலைகள்) வரை அறுவடை செய்கின்றனர்.
12வது மாதத்தில் வாழை காய் அறுவடை செய்யப்படுகின்றன. காய்கள் அறுவடைக்கு பின் பிரதான கன்றுகள் மற்றும் பக்க கன்றுகள் மூலம் வாழை இலை அறுவடை நடைபெறுகிறது. திருப்பாச்சேத்தியில் வாரம்தோறும் வியாழன் மற்றும் ஞாயிறன்று வாழை சந்தை நடைபெறும், பரமக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து வாழை இலை, காய், பூ, மரம் ஆகியவற்றை வாங்கி செல்கின்றனர்.
ஒரு கட்டு இலை தரத்திற்கு ஏற்ப முகூர்த்த நாட்களில் ஆயிரம் ரூபாயில் இருந்து இரண்டாயிரத்து 500 ரூபாய் வரை விற்பனையாகிறது. மற்ற நாட்களில் விலை கிடைப்பதில்லை. தமிழகத்தில் பிளாஸ்டிக் பேப்பர், கப்புகளுக்கு தடை இருந்த போதிலும் நடைமுறைப்படுத்தாததால் பயன்பாடு குறையவில்லை. பரவலாக விவசாயிகள் வாழை பயிரிட தொடங்கும் போது நிரந்தரமாக விலை கிடைக்கும் - கண்ணன், பழையூர் முகூர்த்த நாட்களில் மட்டுமே விலை கிடைக்கும் என்பதால் மதுரை மார்க்கெட்டிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாழை இலைகள் வந்து விடுவதால் போதிய விலை கிடைப்பதில்லை.பெரிய இலைகளே ஒரு கட்டு 500 ரூபாய்க்கு தான் விற்பனை செய்யப்படுகிறது, விசேஷ நாட்களை கணக்கிட்டு அறுவடை செய்ய முடியவில்லை. வெயில், காற்று காரணமாக இலை கிழிந்து சேதமடைந்து வருகின்றன. - மணிவண்ணன், திருப்புவனம்