/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் நெல் மூடைக்கு ரூ.1100 நெல்லை விற்க தயங்கும் விவசாயிகள்
/
சிவகங்கையில் நெல் மூடைக்கு ரூ.1100 நெல்லை விற்க தயங்கும் விவசாயிகள்
சிவகங்கையில் நெல் மூடைக்கு ரூ.1100 நெல்லை விற்க தயங்கும் விவசாயிகள்
சிவகங்கையில் நெல் மூடைக்கு ரூ.1100 நெல்லை விற்க தயங்கும் விவசாயிகள்
ADDED : ஜன 10, 2025 04:57 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நெல் மூடைக்கு (67 கிலோ) ரூ.1,100 மட்டுமே வியாபாரிகள் வழங்குவதால், நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் ஆறு, கிணறு, கண்மாய் பாசனம் மற்றும் மானாவாரியாக 1.95 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் நெல் நடவு செய்துள்ளனர். அதிகமாக என்.எல்.ஆர்., ஜோதி, பொன்னி, அம்மன், பீ.பி.எல்., ஆர்.என்.ஆர்., ரகம் மற்றும் கருப்பு கவுனி, சீரகசம்பா, துாயமல்லி போன்ற பாரம்பரிய நெல் ரகங்களை நடவு செய்துள்ளனர். 2024 ம் ஆண்டு அக்டோபரில் இருந்தே மேலடுக்கு சுழற்சி மற்றும் டிசம்பரில் வடகிழக்கு பருவ மழை என தொடர்ந்து மழை கைகொடுத்தது.
அனைத்து விவசாயிகளும் தங்களது நிலங்களில் நெல் நடவு செய்து, ஜன., 15 தேதிக்கு பின் தை பிறப்பையொட்டி அறுவடை செய்ய தயாராகி வருகின்றனர். நல்ல விளைச்சல் இருந்தால் ஏக்கருக்கு 2.5 முதல் 3 டன் வரை நெல் மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். தொடர் மழையால் பருவத்திற்கு முன்பே நெல் நடவு செய்த விவசாயிகள் ஜன., பிறந்த உடன் அறுவடையை துவக்கியுள்ளனர்.
நெல் மூடை ரூ.1,100க்கு விற்கிறது
தற்போது ஆங்காங்கே நெல் அறுவடை செய்து வருகின்றனர். நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் நெல் கொள்முதல் நிலையம் திறக்கவில்லை. இதனால், கேரளா உள்ளிட்ட பிற மாநில அரிசி வியாபாரிகள் தற்போது சிவகங்கை மாவட்ட விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய துவக்கி விட்டனர். கடந்த ஆண்டு ஒரு மூடை (67 கிலோ) ரூ.1,300 க்கு வாங்கினர். இந்த ஆண்டு ரூ.1,100 க்கு மேல் கேட்பதில்லை. பொதுவாக அறுவடை செய்த நெல் மூடைக்கு ரூ.2,500 முதல் 3,000 வரை கிடைத்தால் மட்டுமே, வயலில் செலவழித்த தொகையை எடுக்க முடியும். இதனால் வியாபாரிகளிடம் நெல்லை விற்க முன்வராமல் விவசாயிகள் தயக்கம் காட்டுகின்றனர்.
40 இடங்களில் கொள்முதல் நிலையம்
அதே நேரம் நெல் கொள்முதல் நிலையத்தை விரைந்து துவக்கினால், விவசாயிகள் அரசுக்கே அதிகளவில் நெல்லை வழங்க முன்வருவர். இதற்காக நுகர்பொருள் வாணிப கழக நிர்வாகம் மாவட்டத்தில் அனைத்து தாலுகா விவசாயிகளிடமும் நெல்லை கொள்முதல் செய்ய ஏதுவாக, 40 இடங்களில் கொள்முதல் நிலையம் திறக்க முடிவு செய்து, அதற்கான பூர்வாங்க பணிகளை துவக்கியுள்ளனர்.
எனவே தை பிறந்ததும் நெல்லை அறுவடை செய்ய துவங்க உள்ள விவசாயிகளுக்கு ஆறுதல் அளிக்கும் விதத்தில் விரைந்து நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.