/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம் ஒரே நேரத்தில் முடிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
/
காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம் ஒரே நேரத்தில் முடிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம் ஒரே நேரத்தில் முடிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம் ஒரே நேரத்தில் முடிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : பிப் 13, 2024 06:53 AM
சிவகங்கை : ''திருச்சி, கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், துாத்துக்குடி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் விதத்தில் காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்தை ஒரே நேரத்தில் முடிக்க வேண்டும்,'' என எம்.பி., (அ.தி.மு.க.,) தேர்தல் அறிக்கை குழுவிடம் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
காவிரி, வைகை,குண்டாறு கால்வாய்
காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு முதற்கட்டமாக காவிரியில் இருந்து தெற்கு வெள்ளாறு வரை 118.45 கி.மீ., துாரமும், இரண்டாம் கட்டமாக தெற்கு வெள்ளாறு முதல் வைகை ஆறு வரை 109 கி.மீ., துாரமும், மூன்றாம் கட்டமாக வைகை ஆற்றில் இருந்து குண்டாறு வரை 34 கி.மீ., துாரமும் செயல்படுத்த உள்ளனர். இத்திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி, ஒரே நேரத்தில் 3 கட்ட பணியையும் முடிக்க வேண்டும்.
கைகொடுக்கும்'மூல வைகை'
மூலவைகையில் துவங்கி தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை வழியாக ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு 258 கி.மீ., துாரம் வரை ஓடுகிறது. இந்த அணையின் கீழ் வலது, இடது கால்வாய்கள் 138 உள்ளது. பேரணை முதல் விரகனுார் வரை முதல் ரீச் பகுதி. இந்த பகுதியில் திறக்கப்படும் தண்ணீர் 45 கண்மாய்களை நிரப்பி 19,276 ஏக்கர் பாசனம் பெறும்.
விரகனுார் மதகு அணையில் இருந்து பார்த்திபனுார் மதகு அணை வரை 2ம் ரீச் பகுதிக்கு திறக்கும் தண்ணீர் 133 கண்மாய்களை நிரப்பி 40,887 ஏக்கர் பாசனம் பெறும். பார்த்திபனுார் மதகு அணைக்கு கீழ் மூன்றாவது ரீச் பகுதி மூலம் 241 கண்மாய்களை நிரப்பி 67,837 ஏக்கர் நிலம் பாசனம் பெறும்.
கிருதுமால் நதி கால்வாய் அகலப்படுத்து
முதல் ரீச்சில் 8,247 ஏக்கர் பாசன பரப்பை அதிகரித்து, 27,523 ஏக்கராக்கி விட்டனர். அதே சமயம் 2வது ரீச்சில் ஒன்றுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தில் 46 பாசன கண்மாய்களை நீக்கிவிட்டனர்.
இது போன்ற பிரச்னையை தவிர்க்க வைகை ஆற்றில் விரகனுார் மதகு அணையில் இருந்து மேலவெள்ளூர் அணை வரை கிருதுமால் நதிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் 13 கி.மீ., துார வாய்க்காலை 5 ஆயிரம் கன அடி தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் விரிவுபடுத்த வேண்டும். இது போன்ற பிரச்னைக்கு தீர்வு காண வைகை அணை, வைகை பாசன பகுதியை நிர்வகிக்க வைகை வடிநில கோட்டத்தை புதிதாக உருவாக்க வேண்டும்.
புதிய கோட்டம் உருவானால் மட்டுமே 258 கி.மீ., நீளமுள்ள வைகை ஆறு, வைகை அணை, அதன் கீழ் உள்ள பேரணை, விரகனுார், மதகு அணை, பார்த்திபனுார் மதகு அணை, 128 கால்வாய்கள்,419 கண்மாய்கள் 1.36 லட்சம் ஏக்கர் பூர்வீக பாசன ஆயக்கட்டு ஆகியவற்றை நிர்வகிக்க முடியும்.
நெல் குவிண்டாலுக்கு ரூ. 3000 வழங்கு
மானாமதுரை வட்டம் வைகை வடிநிலக்கோட்டம் சுப்பன் கால்வாய் திட்டம் மூலம் பாசனம் பெறும் 26 கண்மாய்களுக்கும் நாட்டார் கால்வாய் மூலம் பாசனம் பெறும் கண்மாய்களுக்கும் வைகை ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும். பயனின்றி கிடக்கும் சுப்பன் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகள் வழங்கும் நெல்லுக்கு தேர்தல் அறிக்கைபடி குவிண்டாலுக்கு (100 கிலோ) ரூ.3000 வழங்க வேண்டும்.
புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மானாவாரி கண்மாய்களுக்கு செல்லும் மழை நீரை தடுக்கும் விதமாக வனத்துறை மூலம் வன காப்பு காடுகளில் தைல மரங்கள் (யூகலிப்டஸ்) பயிரிடுவதை தடை செய்ய வேண்டும்.
மத்திய அரசு, தமிழக மீனவர்களின் நலன் கருதி கட்டாயம் கச்சத்தீவை மீட்டே ஆக வேண்டும். இவ்வாறு எம்.பி., தொகுதி தேர்தல் அறிக்கை குழுக்களிடம் காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாநில தலைவர்ஆர்.கே., மச்சேஸ்வரன், செயலாளர் ஆர்.எம். முருகன் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.