/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கண்மாயில் மண் எடுக்க எதிர்ப்பு: விவசாயிகள் போராட்டம்
/
கண்மாயில் மண் எடுக்க எதிர்ப்பு: விவசாயிகள் போராட்டம்
கண்மாயில் மண் எடுக்க எதிர்ப்பு: விவசாயிகள் போராட்டம்
கண்மாயில் மண் எடுக்க எதிர்ப்பு: விவசாயிகள் போராட்டம்
ADDED : ஆக 28, 2025 05:52 AM
திருப்புவனம் : திருப்புவனம் அருகே கணக்கன்குடி கண்மாயில் வண்டல் மண் எடுக்க தாசில்தார் வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி ஏனாதி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
கணக்கன்குடி கண்மாயில் 185 கன மீட்டர் அளவிற்கு வண்டல் மண் எடுக்க திருப்புவனம் தாசில்தார் விஜயகுமார் ஒரு மாத காலத்திற்கு அனுமதி வழங்கியுள்ளார்.கண்மாயில் வண்டல் மண் எடுத்தால் விவசாயம் பாதிக்கப்படும் என கூறி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த ஏனாதி நீலமேகம், கண்மாய் நீர்ப்பாசன சங்க தலைவர் அய்யாச்சாமி தலைமையில் ஏனாதி கிராம மக்கள் மண் அள்ள வந்த இயந்திரங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தும் இரவு ஏழு மணி வரை யாருமே வரவில்லை.
நீலமேகம் கூறுகையில்: வருவாய்த்துறையினர் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கியுள்ளனர். இயந்திரங்களை சிறைபிடித்து இரண்டு மணி நேரமாக போராட்டம் நடத்தியும் அதிகாரிகள் யாருமே வரவில்லை. அனுமதியை ரத்து செய்யாவிட்டால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம், என்றார்.
தாசில்தார் விஜயகுமார் கூறுகையில்: வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கியது உண்மை தான், விவசாயிகள் கோரிக்கையின் பேரில் அனுமதி வழங்கப்பட்டது. இயந்திரங்களை சிறைபிடித்து போராட்டம் நடந்த இடத்திற்கு அதிகாரிகள் செல்லாதது ஏன் என கேட்ட போது பதிலளிக்க மறுத்துவிட்டார்.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்: வருவாய்த்துறை வழங்கிய அனுமதி அது, நாங்கள் எந்த அனுமதியும் வழங்கவில்லை, என்றனர். மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.