/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை மாவட்ட கோயில்களில் விநாயகர் சதுர்த்தி
/
சிவகங்கை மாவட்ட கோயில்களில் விநாயகர் சதுர்த்தி
ADDED : ஆக 28, 2025 05:36 AM

தேவகோட்டை : சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜை நடந்தது.
தேவகோட்டை சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில்,கலங்காது கண்ட விநாயகர் கோயில், மந்திர மூர்த்தி விநாயகர் கோயில்,நகர சிவன் கோயிலில் மரகத விநாயகர், தி.ஊரணி. கைலாசவிநாயகர் கோயில்,சுந்தர விநாயகர் கோயில், ராம்நகர் கவுரி விநாயகர் கோயில்,ஜெயங்கொண்ட விநாயகர், விநாயகபுரம் விநாயகர் கோயில், சொர்ண விநாயகர், காமாட்சி அம்மன் கோயில் சவுபாக்ய விநாயகர், பட்டுக் குருக்கள் நகர் அட்சய மகா கணபதி, வழிவிடும் வலம்புரி விநாயகர் கோயில், கருதாவூரணி கைலாச விநாயகர், ஆலமரத்தடி விநாயகர் வெற்றி விநாயகர் கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.
கீழச்சிவல்பட்டி இளையாத்தக்குடி கைலாச விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 108 கலசாபிஷேகம் நடந்தது. நேற்று அதிகாலை நடை திறந்து பூர்வாங்க பூஜைகள் நடந்தன.மூலவர் வெள்ளி திருவாச்சி அங்கி அலங்காரத்தில்,தந்தத்துடன் எழுந்தருள தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பெரிய கோயிலிலிருந்து உற்ஸவ விநாயகர் புறப்பாடு துவங்கியது. காலை 9:15 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகளை சிவாச்சாரியார்கள் துவக்கினர்.
தொடர்ந்து யாகசாலையிலிருந்து 108 கலசங்கள் சிவாச்சாரியார்களால் புறப்பட்டு மூலவர் சன்னதி சேர்ந்தது. தொடர்ந்து மூலவருக்கு கலசத்திலிருந்த புனித நீரால் அபிேஷகம் நடந்தது. பின்னர் அலங்காரத்தில் எழுந்தருளிய விநாயகருக்கு தீபராதனை நடந்தது. மாலையில் மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இரவு மூஷிக வாகனத்தில் உற்ஸவர் திருவீதி வலம் வந்தார்.
சிங்கம்புணரி சிங்கம்புணரி கோயில்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார், சிவபுரிபட்டி சுயபிரகாச ஈஸ்வரர், பிரான்மலை மங்கை பாகர் தேனம்மை உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஹிந்து முன்னணி சார்பில் சிங்கம்புணரி நகர், வேங்கைப்பட்டி, காட்டுக்கருப்பன்பட்டி, ஓசாரிபட்டி, மட்டிக்கரைப்பட்டி உள்ளிட்ட இடங்களில் 40க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு நேற்று அனைத்து இடங்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இன்று மாலை 6:00 மணிக்கு விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது.
திருப்புத்துார் திருப்புத்துார் திருத்தளி நாதர் கோயிலில் வன்னிமரத்து விநாயகருக்கு அபிஷேகம் நடந்தது. சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7:00 மணி அளவில் உற்ஸவ விநாயகர் மூஷிக வாகனத்தில் எழுந்தருள தீபாராதனை நடந்தது. பின்னர் தேரோடும் வீதிகளில் உலா நடந்தது.தம்பிபட்டி கவுரி விநாயகர் கோயிலில் மூலவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் பால் குடம் எடுத்து வழிபட்டனர். தொடர்ந்து மூலவருக்கு பாலாபிேஷகம் நடந்தது.