/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வயல்களில் வெடிகளுடன் காத்திருக்கும் விவசாயிகள் விவசாயத்தில் அதிகரிக்கும் செலவு
/
வயல்களில் வெடிகளுடன் காத்திருக்கும் விவசாயிகள் விவசாயத்தில் அதிகரிக்கும் செலவு
வயல்களில் வெடிகளுடன் காத்திருக்கும் விவசாயிகள் விவசாயத்தில் அதிகரிக்கும் செலவு
வயல்களில் வெடிகளுடன் காத்திருக்கும் விவசாயிகள் விவசாயத்தில் அதிகரிக்கும் செலவு
ADDED : நவ 20, 2024 07:07 AM
திருப்புவனம்,: திருப்புவனம் பகுதியில் நெல் வயல்களில் பறவைகளால் ஏற்படும் சேதத்தை தடுக்க விவசாயிகள் கைகளில் வெடிகளுடன் காத்து கிடக்கின்றனர்.
திருப்புவனம் வட்டாரத்தில் சம்பா நெல் சாகுபடி தொடங்கியுள்ளது. திருப்புவனம், திருப்பாச்சேத்தி, பழையனுார் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் என்.எல்.ஆர்., ஆர்.என்.ஆர்., கோ50, கோ51, அண்ணா ஆர் 4 உள்ளிட்ட நெல் ரகங்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
திருப்புவனம் பகுதி வைகை ஆற்றுப்பாசனம் என்பதால் விவசாயிகள் நாற்றங்கால் அமைத்து 45 நாட்களுக்கு பின் அதனை பறித்து வயல்களில் நடவு செய்வது வழக்கம்.
நடவு செய்த வயல்களில் தண்ணீர் நிற்பதால் புழு, பூச்சி, சிறு மீன்கள் இருக்கும், அதனை வெள்ளை கொக்கு உள்ளிட்ட பறவைகள் உண்ண வரும், இந்தாண்டு புது வரவாக கருப்பு நாரை எனப்படும் பறவைகள் கூட்டம் கூட்டமாக வயல்களை சேதப்படுத்தி வருகின்றன.
வயல்களில் கூட்டமாக இறங்கும் இவைகள் நாற்றுகளை நாசப்படுத்தி விடுகின்றன. இவற்றை விரட்டினாலும் மீண்டும் மீண்டும் வந்து சேதப்படுத்தி வருகின்றன.
இவற்றை விரட்ட முடியாமல் தவிக்கும் விவசாயிகள் தற்போது வெடிகளை கையில் எடுத்துள்ளனர்.
தீபாவளிக்கு விற்பனைக்கு வந்த வெடி உள்ளிட்டவற்றை வாங்கி வயல்களின் கரைகளில் அமர்ந்திருக்கும் விவசாயிகள் பறவை வந்தால் அவற்றை வெடித்து விரட்டி வருகின்றனர்.
விவசாயிகள் கூறுகையில்: கூலி ஆட்கள் தட்டுப்பாடு, உரம் விலை உயர்வு உள்ளிட்டவற்றால் விவசாயத்தில் செலவு அதிகரித்துள்ள நிலையில் புது வரவாக கருப்பு நாரைகளாலும் செலவு அதிகரித்துள்ளது.
வெடிகளுக்கு செலவு செய்ய வேண்டியுள்ளது. வேறு வழியின்றி நெல் நாற்றுகளை காப்பாற்ற நான்கு, ஐந்து விவசாயிகள் இணைந்து வெடி வாங்கி பயன்படுத்தி வருகிறோம், என்றனர்.