ADDED : செப் 28, 2024 05:39 AM
தேவகோட்டை : தேவகோட்டை தாலுகாவில் மழை பெய்யாமல் ஏமாற்றி வருகிறது. மேலும் வெயிலும் சித்திரை போல் இருக்கிறது.
பொதுவாக புரட்டாசி மாதத்தில் விதைத்து பயிர் முளைத்து முதல் கட்டமாக களைகளை பறிக்க வேண்டிய காலமாகும். பெரும்பாலான கிராமங்களில் சிறு தூறல் கூட இல்லாததால் விதை போட்டும் பயிர் கிளம்பவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சில நேரங்களில் நகரங்களில் பெய்த மழை கூட கிராமங்களில் இல்லை.
மழையை நம்பி விவசாயிகள் தங்கள் வயலில் முதலில் உழுது, பின் மண்ணை கிளறி புரட்டி விட்டு மறு உழவும் செய்தனர் . சிலர் விதைத்தும் உள்ளனர்.பயிர் வெளிக் கிளம்பாமல் இருப்பதால் கடந்த சில தினங்களாக இரண்டாவது முறை உழுது இரண்டாம் முறையாக விதைக்க துவங்கி உள்ளனர்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது என அறிவிப்பு வரும் போதெல்லாம் விவசாயிகள் வானத்தை ஏக்கத்துடன் பார்க்கின்றனர். கிராமங்களில் கண்மாய், ஊருணியில் தண்ணீர் இல்லை. ஆடு மாடு குடிக்கக் கூட தண்ணீர் இல்லாமல் உள்ளது. ஒரு சிலர் தங்கள் பகுதியில் இருந்த தண்ணீரை நம்பி விதைத்ததில் பயிர் கிளம்பி தொடர் மழை இல்லாததால் தற்போது மாடுகள் பயிரை மேய்ந்து வருகிறது.
திருப்பாக்கோட்டை திருநாவுக்கரசு கூறுகையில், பருவ மழை துவங்காவிட்டாலும் இந்த நேரம் சிறு மழை, லேசான தண்ணீர் கிடக்கும். ஆனால் மழையே பொய்த்து விட்டது. வெயிலில் வயல் காய்ந்து உழுத மண் வீணாகிறது. வெப்பம் காரணமாக மழை வரும் என்றனர். எங்கள் பகுதியில் மழையே இல்லை.
சென்னை, மற்றும் வடக்கு பகுதியில் மழை பெய்கிறது. தேவகோட்டை தாலுகாவில் மழை இல்லை. இனிமேல் மழை பெய்து மீண்டும் உழுது மண்ணை பக்குவபடுத்தி விதைத்து உரம் சரியான நேரத்தில் கிளறி போட்டு பயிரை காப்பாற்றி பலன் கிடைக்குமா என்ற கவலை மேலோங்கி நிற்கிறது என்று கூறினார்.